மனைகள் வரன்முறை, பதிவுக் கட்டணம் உயர்வால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பத்திரப் பதிவு வருவாய் 2 மடங்காக உயர்வு: ஆண்டு வசூல் ரூ.9,121 கோடியை தாண்டியதாக பதிவுத் துறை தலைவர் தகவல்

By கி.கணேஷ்

அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறை செய்யப்படுவது, பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது போன்ற காரணங்களால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவு வருவாய் இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள் ளார்.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில், வணிகவரித் துறைக்கு அடுத்ததாக உள்ளது பதிவுத் துறை. சொத்து பரிவர்த்தனை தொடர்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்கள், திருமணப் பதிவு, பிறப்பு, இறப்பு பதிவு ஆவணங்களுக்கான பொறுப்பு ஆகிய அனைத்தும் பதிவுத் துறையிடமே உள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், கடலூர், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 9 பதிவு மண்டலங்களின் கீழ், 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. நாட்டிலேயே அதிக அளவிலான சார்பதிவாளர் அலுவலகங்கள் தமிழகத்தில்தான் உள் ளன.

பதிவுத் துறையைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணையவழி பதிவு முறை குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. முறைப்படி இத்திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இணையவழி ஆவணப்பதிவில் இருந்த சிக்கல்கள் ஒவ்வொன்றாக களையப்பட்டு, தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பதிவுகள் நடக் கும் நிலை உருவாகியுள் ளது.

இதற்கிடையில், பத்திரப் பதிவுத் துறையின் வருவாயும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் தற்போது வரை வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த 1865-66 ஆண்டில், அதாவது சுமார் 150 ஆண்டு களுக்கு முன்பு, தமிழக பதிவுத் துறை 1 லட்சத்து 25 ஆயிரம் ஆவணங்களைப் பதிவு செய்து, அதன்மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் வருவாய் ஈட்டியது. தற்போது, பத்திரப் பதிவுகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 22 லட்சத்தை தாண்டியுள்ளது. வருவாய் ரூ.9 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

குறிப்பாக, கடந்த 2007-08 நிதியாண்டில் ரூ.4,232 கோடியே 36 லட்சமாக இருந்த வருவாய் 2017-18 நிதியாண்டில் 2 மடங்காக, அதாவது ரூ.9,121 கோடியே 53 லட்சமாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டைவிட, கடந்த நிதியாண்டில், 9.01 சதவீதம் பதிவுகளும், 30.10 சதவீதம் வருவாயும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் `இந்து தமிழி’டம் கூறியதாவது:

``கடந்த 2016-17 நிதியாண்டில் பதிவுகள் குறைந்ததற்கு, அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவுசெய்வதற்கு தடை இருந்ததே காரணம்.

அதன்பிறகு, அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்டு வருவதால், பத்திரப் பதிவு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதனால் தற்போது பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது. இது தவிர, மூல ஆவணம் இல்லாமல் பதிவு செய்வது தவிர்க்கப்பட்டதால், பதிவு அதிகரித்துள்ளதுடன், போலி பதிவுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த 2018-19 நிதியாண்டின் கடந்த 3 மாதங்களில் 6,32,014 பத்திரங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 1,74,617 பதிவுகள் அதிகமாகும். அதே போல வருவாயும் முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.907 கோடியே 56 லட்சம் அதிகரித்து, ரூ.2,687 கோடியே 30 லட்சம் கிடைத்துள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

நாளொன்றுக்கு 10,000 பதிவுகள்

மேலும், இணையதள பதிவு முறை அமல்படுத்தப்பட்டு, அதில் இருந்த குறைகள் பெருமளவு களையப்பட்ட பிறகு, சமீபகாலமாக நாள் ஒன்றுக்கு சராசரி யாக 10 ஆயிரம் பத்திரங்கள் பதியப்படுவதாக பதிவுத் துறை தலைவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக, கடந்த ஜூன் 4-ம் தேதி 14,185 பத்திரப் பதிவுகள், 13-ம் தேதி 15,740 பதிவுகள், 27-ம் தேதி 14,458 பதிவுகள் நடந்துள்ளதாக பதிவுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்