தமிழகத்தில் மீண்டும் மலர்ந்துவரும் அரசியல் நாகரிகம்

By எம்.சரவணன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நலம் விசாரித்திருப்பது தமிழகத்தில் மீண்டும் அரசியல் நாகரிகம் மலர்ந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

1951-ல் நடந்த நாட்டின் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு கட்சிகள் களமிறங்கின. அரசியலிலும், தேர்தல் களத்திலும் எதிரெதிர் முனைகளில் நின்றாலும், பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் தலைவர்கள் நட்புடன் பழகி வந்தனர். மாற்றுக்கட்சியினரின் இல்ல விழாக்களில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவையில் காரசாரமான வாதங்களில் ஈடுபட்டு கடுமையாக மோதினாலும், உணவகம், பேரவை வளாகங்களில் எவ்வித வேறுபாடும் இல்லாமல் நட்பு பாராட்டுவது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வந்தது.

பெரியாரும், ராஜாஜியும் கொள்கை ரீதியாக எதிரிகள். இருவரும் தங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனாலும், பெரியார் - ராஜாஜி இடையேயான நட்பு இன்றளவும் பேசப்படுகிறது.

காமராஜர் முதல்வராக இருந்த போது அவரை எதிர்த்து அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் அரசியல் செய்தனர். ஆனால், அரசியல் எல்லாம் தேர்தல் களத்தில் மட்டும்தான். பொது இடங்களில் காங்கிரஸ் - திமுக தலைவர்கள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பழகி வந்தனர். அண்ணாவும், கருணாநிதியும் காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்தனர்.

அதுபோலவே ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியன் போன்ற காங்கிரஸின் 2-ம் கட்ட தலைவர்களும், நெடுஞ் செழியன், க.அன்பழகன் போன்ற திமுக

வின் 2-ம் கட்ட தலைவர்களும் அரசியலில் கடுமையாக மோதிக் கொண்டாலும் மற்றபடி நண்பர்களாகவே இருந்தனர்.

1967-ல் முதல்வரான அண்ணாவும் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்க்காமல் நட்புடனே அணுகினார். 1969-ல் கருணாநிதி முதல்வரானதும் காமராஜர் போன்ற தலைவர்களை கடுமையாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்தார்.

ஆனால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972-ல் அதிமுகவை தொடங்கியதும் காட்சிகள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கின. எம்ஜிஆரை மலையாளி என திமுகவினர் விமர்சிக்க, அதற்கு அதிமுகவினர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கினர். ஆனாலும், கருணாநிதி - எம்ஜிஆர் இடையே நாகரிகமான நட்பு தொடரவே செய்தது.

ஒரு கூட்டத்தில் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு அதிமுக நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சிக்க, அந்த நிர்வாகியை மேடையிலேயே கண்டித்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989 பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார்.

எதிர்க்கட்சியை உண்மையிலேயே எதிரி கட்சியாக பார்க்கும் கலாச்சாரம் மெல்ல உருவாகத் தொடங்கியது இந்த காலகட்டத்தில்தான். இது 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் உச்சத்தை அடைந்தது. அதிமுக, திமுகவினர் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் என எங்கும் சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியே நேருக்குநேர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் பார்த்தும் பார்க்காததுபோல சென்றுவிடுவார்கள்.

அதிமுகவினர் திருமணம் போன்ற இல்ல விழாக்களுக்கு திமுகவினரை அழைக்கமாட்டார்கள். திமுகவினரும் அப்படியே. ஒருசிலர் சந்திக்க நேர்ந்தாலும் அதுகுறித்த செய்திகள், படங்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியை ஜெயலலிதா எதிரியாகவே பார்த்தார். 1991 - 1996, 2001 - 2006, 2011 - 2016 என ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில் கருணாநிதி சட்டப்பேரவைக்கே செல்லவில்லை. அதுபோல 2006 - 2011-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா ஒருசில நாட்கள் மட்டுமே பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் பேரவைக் கூட்டம் நடந்தபோது ஜெயலலிதா ஒருநாள்கூட வரவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரையின் மகளுக்கும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேலூர் ஞானசேகரன் மகனுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தம்பிதுரை பங்கேற்கவில்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் மிகமோசமான நிலையில் இருந்தது.

ஆனால், தேசிய அரசியலிலும், மற்ற மாநிலங்களிலும் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுஇடங்களில் நட்புடனே இருந்து வருகின்றனர். அரசியலில் ஒன்று சேரவே முடியாத எதிரிகளான காங்கிரஸ் - பாஜக தலைவர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒருவரை ஒருவரை கட்டித்தழுவி அன்பு பாராட்டிக் கொள்வார்கள். குடும்ப விழாக்களிலும் பங்கேற்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழகத்திலும் வராதா என ஏங்கியவர்கள் பலர்.

ஆனால், கடந்த 2016 செப்டம்பர் 2-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

2017 டிசம்பரில் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வரானபோதும், அதன்பிறகு பழனிசாமி முதல்வராக இருக்கும் தற்போதும் அதிமுக - திமுகவினர் சகஜமாக பழகி வருகின்றனர். சட்டப்பேரவையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் திமுக தலைவர்கள் உறுப்பினர்களுடன் நட்புடன் பழகுவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்துதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர் களும் நேரில் சென்று விசாரித்தனர்.

1989-க்குப் பிறகு அரிதினும் அரிதாகிப்போன அரசியல் நாகரிகம் மீண்டும் தமிழகத்தில் மலர்ந்துள்ளது. ‘மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று அண்ணா சொன்னதை அவரது வழிவந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்