மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: மேட்டூர் அணையை திறந்துவைத்த பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்கு தண்ணீரை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காவிரி பாசன மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் கடைமடை பகுதிவரை செல்வதை ஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேர் கண்காணித்து உறுதி செய்வார்கள். விவசாயத் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

கோதாவரி நீர் ஆண்டுதோறும் 2,500 முதல் 3,000 டிஎம்சி  வரை வீணாக கடலில் கலக்கிறது. கோதாவரி நதியை காவிரியுடன் இணைத்தால் தமிழகத்துக்கு 125 டிஎம்சி நீர் கிடைக்கும். இந்த நீரை நீரேற்றும் முறையில் மேல்மட்ட பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

காவிரி நீர் செல்லும் வழித்தடத்தில் எங்கும் தடுப்பு அணை கட்டுவதற்கான வாய்ப்பில்லை. காவிரி செல்லும் அனைத்து இடங்களும் சமதள பகுதியாக இருப்பதால் அணை கட்டுவதற்கான சூழல் இல்லை. இதனை கவனத்தில் கொண்டு, நீரை சேமிப்பதற்கான ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

ஆதரவளிக்கத் தேவையில்லை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து 22 நாட்கள் நமது உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை முடக்கினர். தமிழக பிரச்சினைக்காக தமிழக எம்பிக்கள் மட்டுமே குரல் கொடுத்தனர். மற்ற கட்சியினர் யாரும் நமக்கு குரல் கொடுக்கவில்லை. எனவே, தமிழக பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் கொடுப்போம். ஆந்திர மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதற்கு நாம் ஆதரவளிக்கத் தேவையில்லை.

என்இசிசி விலையின் அடிப் படையில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை ஊழல் என்பது சாத்தியம் இல்லை. வருமான வரி சோதனையில் என் உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது இயல்பானது. அவர் எனக்கு உறவினராக இருப்பதற்கு முன்பே டெண்டர் எடுத்து வருகிறார். அவர் 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார். திமுக ஆட்சி காலத்திலேயே 10 வேலைகளை ரூ.500 கோடி மதிப்பில் அவர் செய்துள்ளார். பசுமைவழிச் சாலை திட்டத்தில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நீர்மட்டம் 110 அடி

முன்னதாக காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரை முதல்வர் பழனிசாமி மலர்தூவி திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ‘‘கர்நாடக அரசு நீரை தர மறுத்தபோதும், இறைவன் அருளால், வருண பகவானின் கருணையினால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடி நீர் வருகிறது. கடந்த மாதம் வறண்டு இருந்த மேட்டூர் அணை இன்று 110 அடியை நெருங்கியுள்ளது. காவிரி சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாக மேட்டூர் அணை வளாகத்தில் ரூ.1.25 கோடியில் நினைவுத் தூண் கட்டப்படும். அணை பூங்கா ரூ.75 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீர் வடியும் காலங்களில் அணையில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். தேசிய தலைவராக விளங்கிய ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்றார்.

இதனிடையே, அணை நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்