கணினி வழியில் நீட் தேர்வு; சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் முடிவு: வைகோ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

 நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைத் திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துக்கொண்ட மத்திய பாஜக அரசு, அடுத்தடுத்து கொண்டு வரும் திட்டங்கள் எதேச்சதிகாரமானதாக உள்ளன.

நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் போராடிக்கொண்டு இருக்கும் போது, அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் இரண்டு ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.

நீட் தேர்வில் வினாத்தாள்களைத் தமிழில் மொழி பெயர்த்ததில் பல குளறுபடிகள் இருந்ததால், தமிழ் வழித் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் தவித்தனர். தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவரும் வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.

நீட் தேர்வு வினாக்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்யும்போது எந்தப் பாடத் தொகுப்பிலிருந்து எடுக்கப்படுகிறது? வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது? என்ற தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா? மேலும், தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ், ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது, புரிந்து கொள்வது? போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறதா? என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சிபிஎஸ்இ நிர்வாகம், தமிழகத்தில் சில தேர்வு மையங்களில் இந்தி மொழியில் வினாத்தாள்களை வழங்கி மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் போகிறோம். சிபிஎஸ்இ நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், இணையம் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தேர்வுகளை நடத்தியதுதான். தற்போதும் முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், எழுத்துத் தேர்வாக இல்லாமல் கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கணினி வழித் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக பயிற்சி மையங்கள் நடத்துவோம் என்று மத்திய அமைச்சர் கூறுவது கண்துடைப்பு ஆகும்.

11 மொழிகளில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை, எட்டு அமர்வுகளில் நடத்தினால் நாடு முழுவதும் ஒரே தர வரிசைப் பட்டியலை எப்படி வெளியிட முடியும்? என்று நியாயமான கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி உள்ளனர்.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் எந்த நிலையிலும் மருத்துவக் கல்வி பெற்றுவிடக்கூடாது என்று சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.

மாநில உரிமைகளை காலில்போட்டு மிதித்து கூட்டாட்சி கோட்பாட்டையே சிதைத்து வரும் மத்திய பாஜக அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு என்று அனைத்தையும் ஒற்றை இந்துத்துவ தேசியமயமாக்கும் பாஜக அரசின் பாசிச திட்டங்களை ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்