விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டவர் போலீஸார் தூங்கும்போது தப்பி ஓட்டம்

By செய்திப்பிரிவு

அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட நபர், போலீஸார் தூங்கும்போது தப்பியோடிவிட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியிலிருந்து கேரளத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கடந்த திங்கள்கிழமை கோவை உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வபுரம் எஸ்.ஏ. கார்டன் பகுதியிலுள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர். அதில் 4 டன் ரேசன் அரிசி, ஒரு லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அரிசி கடத்த முயன்றதாக கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஹபிப் ரகுமான் (39) என்பவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹபிப் ரகுமானை பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி, செல்லமுத்து நகரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை இரவு போலீஸார் அழைத்து வந்தனர். இந்த அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. விசாரணையை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை காலை, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்திருந்தனர்.

எனவே அலுவலகத்தின் ஒரு அறையில் ஹபிப் ரகுமானை அடைத்து வைத்திருந்தனர். மறுநாள் காலையில் பார்க்கும் போது அவர் அங்கிருந்து தப்பியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபரை மேற்கு போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் கூறுகையில், விசாரணைக்காக ஹபிப் ரகுமான் அழைத்து வரப்பட்டபோது உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 5 பேர் அங்கு பணியில் இருந்துள்ளனர். அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் கதவு சரியாக மூடப்படவில்லை. போலீஸார் அனைவரும் தூங்கச் சென்ற பின்னர் உட்புறமாக கதவை இழுத்ததில் அது திறந்துள்ளது. அதனாலேயே அவர் எளிதில் தப்பிச் சென்றிருக்கிறார் என்றனர்.

மேலும், அவர் ஏற்கெனவே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய ஹபிப் ரகுமான் தற்போது பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், பொள்ளாச்சி மேற்கு போலீஸார் இணைந்து தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்