புகையிலை குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் சர்ச்சை கருத்து: பசுமைத் தாயகம் கண்டனம்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் சேதுபதியின் புகையிலை குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த  பசுமைத் தாயகம் ''பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் கொண்ட போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என்று புகையிலை தடுப்புச்சட்டத்தில் உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் 'சர்கார்' பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியாகி இருந்தது. இதுகுறித்து பசுமைத் தாயகம் அமைப்பு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்தது.

இதையடுத்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அந்த போஸ்டர் நீக்கப்பட்டது. அரசின் சட்டத்தை தனிநபர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை போல் அண்மையில் இயக்கநர் டி.ராஜேந்தர் விமர்சித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதியும் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, “புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பசுமைத் தாயகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர்கள் புகை பிடிப்பதை எதிர்ப்போர், புகையிலை கம்பெனிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு யார் சொன்னது?

ராமதாஸால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு புகையிலைப் பொருட்களை எல்லா வழிகளிலும் ஒழித்துக்கட்ட கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) முன்வைக்கப்பட்ட MPOWER எனும் புகையிலை ஒழிப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியவர் அன்புமணி ராமதாஸ். இந்த உண்மைகளை நடிகர்களுக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும்.

"புகையிலை நிறுவனங்களுக்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு"

"சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்" என்கிறார் விஜய் சேதுபதி. அதையும் பசுமைத் தாயகம் அமைப்பு செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ITC பள்ளிகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 2012-ம் ஆண்டில் நடத்திய போது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது பசுமைத் தாயகம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அப்போதே கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் புகையிலை நிறுவனங்கள் எதுவும் எந்தவொரு நிகழ்ச்சிக்காகவும் பள்ளிகளில் நுழையக்கூடாது. அந்த நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்தச் செய்தி சர்வதேச ஆய்வுப் பத்திரிகையான BMJ Tobacco Control இதழில் வெளியானது.

இந்தியாவில் ஆண்டுக்காண்டு புகையிலைப் பழக்கம் அதிகரிக்கும் என 2005-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் கணித்தது. ஆனால், அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியாவில் புகைபிடிப்போர் அளவு 9% குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

அன்புமணி மேற்கொண்ட பலமுனை நடவடிக்கைகளில் ஒன்று சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளை முறைப்படுத்தியதும் ஆகும். பொது இடங்களில் புகைக்கத் தடை, பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்கத் தடை, புகையிலை விளம்பரங்களுக்குத் தடை, புகையிலைப் பொருள் விற்கும் கடைகளில் விளம்பரங்களுக்குத் தடை, புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படம், புகையிலைக்கு அதிக வரி, சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கத் தடை, குட்கா-பான்மசாலாவுக்கு முழு தடை - உள்ளிட்ட நடவடிக்கைகள் அவரது முயற்சியால் விளைந்த நன்மைகள் ஆகும்.

அவற்றில் ஒரு பகுதியாக சினிமாவில் எச்சரிக்கை படம், எச்சரிக்கை விளம்பரம் உள்ளிட்டவற்றையும் அவர் சட்டபூர்வமாக செயல்படுத்தியுள்ளார். மாபெரும் சாதனைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்