அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்ற வரலாறு மீண்டும் திரும்பிவிடக்கூடாது: சரத்குமார்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த காலங்களில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்றால், அது அதிமுக ஆட்சிக் காலங்களில் தான் என்னும் வரலாறு, மீண்டும் திரும்பிவிடக் கூடாது என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பஞ்சாயத் ராஜ் என்று சொல்லப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 73-வது அரசியல் சாசன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

விவசாயம், நீர்வளம், அடிப்படை சுகாதாரம், ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி, சாலைகள், குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட சிறு தொழில்கள், குடிநீர் வசதி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான 29 துறைகளில், மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தங்களுக்கிடையே நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே, இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம் நிறைவேறும்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள், உயர் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக இதுவரை நடத்தப்படவில்லை. மேலும், வார்டுகள் மறுவரைவு செய்வதற்கு அரசு, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக கால அவகாசம் எடுத்துக்கொண்டிருப்பதும் ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற பரபரப்பான போராட்டக் கள சூழலில், மக்களின் கவனம் திசை திரும்பி இருப்பதை, அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால், மத்திய அரசு வழங்கவேண்டிய நிதியுதவியும் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் தேக்க நிலை அடைந்திருக்கும் என்பதும் அரசுக்குத் தெரியும்.

சுமார் 8 கோடி தமிழக மக்களின் நலன்களை, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய 273 பேர் கவனித்துக் கொள்வதற்கும், நுண்ணிய நிர்வாக அமைப்புகளான உள்ளாட்சி அமைப்புகளின் சுமார் ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் மக்கள் பிரதிநிதிகள் கவனித்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் இருக்கிறது.

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு காட்டிய காலம் கடத்தும் உத்தியை, உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் காட்டி வருகிறதோ என்ற விமர்சனத்திற்கு தமிழக அரசு ஆளாகிவிடக் கூடாது. அதுமட்டும் அல்லாமல், தமிழகத்தில் கடந்த காலங்களில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்றால், அது அதிமுக ஆட்சிக் காலங்களில் தான் என்னும் வரலாறு, மீண்டும் திரும்பிவிடக் கூடாது.

எனவே, இம்மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை, மேலும் நீட்டிக்காமலும், மேற்கொண்டு காலம் தாழ்த்தாமலும், உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து நடத்த வேண்டும்” என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்