உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தாமதம் ஆவதால் தனி அலுவலர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: பேரவையில் மசோதா நிறைவேற்றம்; திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தாமதமாகி வருவதால் தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி இதற்கான மசோதா சட்டப்பேரவை யில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஊராட்சிகள், நகராட்சிகள் சட்டத் திருத்த மசோதாக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக் கல் செய்தார். அதில் கூறப்பட்டி ருப்பதாவது:

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களின் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து வந்துள்ள கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டுகளில் மக்கள்தொகை 50 சதவீதத்துக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்போது அதை மீண்டும் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணியில் மாநில தேர்தல் ஆணை யம் ஈடுபட்டுள்ளதாலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தாமதமாகிறது. எனவே, வரும் 30-ம் தேதியுடன் முடிவடை யும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இந்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.

அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீது நடந்த விவாதம்:

மா.சுப்பிரமணியன் (திமுக): கடந்த 2016 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்திய பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதன்பிறகு தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது சரியல்ல.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காத தால் குடிநீர் பிரச்சினை, கொசுத் தொல்லை, மின்விளக்கு எரியாதது என பல பிரச்சினைகளால் பொதுமக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பணிகளை தனி அலுவலர்களால் செய்யவே முடியாது. அதனால் இந்த மசோதாக்களை திமுக எதிர்க்கிறது.

தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை இனியும் நீட்டிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை உடனடி யாக நடத்த வேண்டும்.

எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்): உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் குடிநீர், தெருவிளக்கு, குப்பைகள் அகற்றுதல் என அனைத்து பிரச்சினைகளுக்கும் எம்எல்ஏக்களையே மக்கள் அணுகுகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என அரசியல் கட்சிகளைவிட பொதுமக்கள்தான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் சார்பில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

முகமது அபூபக்கர் (இ.யூ. முஸ்லிம் லீக்): உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி நிதியும் கிடைக்கவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவதற்கு வார்டு மறுவரையறை, நீதிமன்ற வழக்குகளே காரணம். உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் மக்கள் பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை. வழக்கத்தை விட அதிகமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் தனி அலுவலர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

14 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்