சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் சிக்கியது: இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் பாஸ்போர்ட் தயாரிக்கும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, மத்திய குற்றப்பிரிவின், போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவினருக்கு, சென்னையிலுள்ள ஒரு இடத்தில் போலியாக பாஸ்போர்ட் தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் வழிகாட்டுதலில் போலி பாஸ்போர்ட் தடுப்புப்பிரிவு கூடுதல் உதவி ஆணையாளர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தான் இத்தகைய போலி பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்தது. அந்த நிறுவனத்தை ரகசியமாக கண்காணித்தபோது, டிராவல்ஸ் உரிமையாளர் தலைமையில் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரிப்பது தெரியவந்தது.

இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடியைச் சேர்ந்த வீரகுமார்(47) அவரது தம்பி எழும்பூரில் வசிக்கும் பாலு (எ) பாலசுப்ரமணியன்(45) கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஷெனாய் நகரைச்சேர்ந்த கார்த்திக்கேயன்(40) செங்குன்றத்தை சேர்ந்த சரவணன்(43) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர்கள் இலங்கை தமிழர்கள் உதவியுடன், தமிழ்நாட்டிலுள்ள பயனற்ற பாஸ்போர்ட்டுகளை விலைக்கு வாங்கி, அந்த பாஸ்போர்ட்டில் உள்ள நபரின் புகைப்படத்திற்கு பதிலாக, அவர்களுக்கு தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி, இந்திய பாஸ்போர்ட்டுகளின் பெயரில் இலங்கை தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(50) அமைந்தகரை, மேத்தா நகரைச்சேர்ந்த உமர் உசைன்(47), கோடம்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்குமார்(36), தி.நகரைச் சேர்ந்த சக்திவேலு(47), இலங்கை தமிழர்களான கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன்(48), அய்யப்பந்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூத்தி(47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போலி 80- இந்திய பாஸ்போர்ட்கள், 12- போலி இலங்கை பாஸ்போர்ட்கள், போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஹார்டு டிஸ்க், ஸ்கேன் மிஷின், பிரிண்டர் மற்றும் போலி முத்திரைகள், போலி இந்தியன் விசா மற்றும் ரூ.85,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் இன்று (25.6.2018) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்