‘நாங்க ரெடி நீங்க ரெடியா’?- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலை பற்றி சட்டப்பேரவையில் நாள் முழுவதும் விவாதிக்க நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா? என்று ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

திமுக சார்பில், கடந்த மே 29 அன்று சட்டப்பேரவையில் மிகவும் தெளிவாக, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; புறக்கணிக்கிறோம்” என்று பேரவைத் தலைவரிடம் கூறிவிட்டுத்தான் அவையில் இருந்து வெளியேறினோம் என்பதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது, நேற்று சட்டப்பேரவையில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் இருந்து தெரிய வருகிறது.

ஒரு ஆலையை மூடுவது என்றால், முதலில் அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெளியான இருபக்க அரசு ஆணையில் இல்லை.

உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுங்கள், அதில் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை என்று காரண, காரிய விளக்கங்களோடு, சட்டரீதியாக எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடம் தராதபடி தெளிவான, முழுமையான ஒரு கொள்கை முடிவை எடுங்கள், அதனடிப்படையில் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த ஆலையின் விதிமீறல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் வரிசையாகச் சுட்டிக்காட்டி, விரிவானதொரு அரசு ஆணையை வெளியிடுங்கள் என்றோம்.

அதுமட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், நீதிமன்றம் எந்தநிலையிலும் குறுக்கிடாமல் இருப்பதற்கும் ஒரே தீர்வாக அமையும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை தன்னுடைய அமைச்சரவையை கூட்டுவதற்கே தயங்கி, தாமதித்துத் தடுமாறி வரும் முதல்வர், ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டதாகப் பேசுவது வியக்கத்தக்கதாக மட்டுல்ல; வேடிக்கையாகவும் இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் எல்லாம் இன்னும் செய்தித்துறையில் பாதுகாப்பாக இருக்கின்றன. வாட்ஸ்அப்பிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை 2013-ல் மூடிவிட்டதாக கூறியிருக்கிறார் முதல்வர். கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 29 அன்று அப்படியொரு உத்தரவு அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நான்கே மாதங்களுக்குள், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறது என்று, அதே அதிமுக அரசு அறிக்கை கொடுத்து, தனது இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டது.

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை என்பது அதிமுகவின் ’பேபி’ அல்லது வளர்ப்புக் குழந்தை. அதை திடீரென்று எங்களுடையது அல்ல என்று கையை உதறி, திமுக மீது திசை திருப்ப நினைப்பது முதல்வருக்குக் கொஞ்சம்கூட அழகல்ல.

ஆலை விரிவாக்கத்திற்கு அதிமுக ஆட்சி நடைபெற்ற 2005 டிச.16 மற்றும் 2006-ம் ஆண்டு பிப்.16 ஆகிய தேதிகளில் நிலம் ஒதுக்கிய விவரங்களைச் சுட்டிக்காட்டி, நில ஒதுக்கீட்டை தற்போது ரத்து செய்திருப்பதையும், திமுக ஆட்சியில்தான் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்பது போல மடைமாற்றிப் பேசியிருக்கிறார்.

ஆகவே, எப்படி, ’துப்பாக்கிச் சூடு’ பற்றியே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தாரோ, அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமலேயே, அரைகுறையாக அவையில் முதல்வர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவை ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், எதிர்க்கட்சி விவாதங்களுக்கு உரிய பதில் அளிக்கவும், ஆர்வமுள்ள எங்கள் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காரணத்தால், மறைந்த ஜெயலலிதா அன்றைக்கு தன்னந்தனியாக வந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார்.

அது கருணாநிதி சட்டப்பேரவையை நடத்தும் பக்குவத்துக்கும், பழுத்த அனுபவத்துக்கும், கிடைத்த வெற்றியே தவிர எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல, ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை உணர வேண்டும். திமுகவின் சட்டப்பேரவைப் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முதல்வர், “அவர்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் திரும்பி வந்து ஜனநாயக கடமையாற்றுவதற்கு எவ்வித தடையும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்களை எடுத்து வைத்து, பணியாற்றுவதில் திமுகவிற்கு, அதிமுகவால் எக்காலத்திலும் ஈடு இணையாக இருக்க முடியாது. தமிழக நலனுக்காகக் கொண்டு வரப்படும் தீர்மானங்களில், ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் திமுகவின் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் ஒருதுளி கூட அதிமுகவுக்குக் கிடையாது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்வார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால், நாளைக்கே அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, விரிவானதொரு அரசு ஆணையை பிறப்பித்து, நிரந்தரத் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுத்தால், திமுக சட்டப்பேரவை கூட்டத்தில் உடனே பங்கேற்கத் தயாராக இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டப்பேரவையில் நாள் முழுவதும் விவாதிக்க, திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “நாங்க ரெடி; முதல்வர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்