பிரபல தாதா ராக்கெட் ராஜா துப்பாக்கி முனையில் கைது: திடுக்கிடும் பின்னணி தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தாதா ராக்கெட் ராஜா தேனாம்பேட்டை போலீஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடசத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை கைது செய்தனர். ராக்கெட் ராஜா கைது பின்னணி குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல தாதா ராக்கெட் ராஜாவை கர்நாடகா மற்றும் தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ராக்கெட் ராஜாவிடமிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

ராக்கெட் ராஜாவின் கதை

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தாதா ராக்கெட் ராஜா (45), வெங்கடேஷ் பண்ணையாரின் வலதுகரமான செயல்பட்டவர். 2003-ம் ஆண்டு வெங்கடேச பண்ணையார் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பின் தலைமறைவாக இருந்து வருகிறார். திருநெல்வேலியில் மிரட்டல், கொலை முயற்சியில் ஈடுபடுவதாக தொடர்ந்து போலீஸாருக்கு புகார் வந்தது. கர்நாடகாவிலும் இவர்மீது மிரட்டல் மற்றும் பல வழக்குகள் உள்ளதால் கர்நாடக போலீஸார் ராக்கெட் ராஜாவைத் தேடி வந்தனர்.

கடந்த ஆண்டு கொடியங்குளம் பேராசிரியர் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சசிகலா புஷ்பாவுக்கு எதிராகப் புகாரளித்த பெண்களின் வீட்டைத் தாக்கிய வழக்கிலும் ராக்கெட் ராஜா மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான ராக்கெட் ராஜாவை போலீஸார் மீண்டும் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர்.

அப்போது ராக்கெட் ராஜாவை போலீஸார் என்கவன்ட்டரில் சுட்டுத்தள்ள உள்ளதாக தகவல் வெளியானதாகக் கூறி அதற்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டார். அதில், போலீஸார் என்கவுன்ட்டரில் தம்மை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் தாம் சரணடைந்தாலும் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நெல்லை போலீஸார் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா, சென்னைக்கு அடிக்கடி தமது ஆதரவாளர்களுடன் வந்து செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. நெல்லையில் போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த ராக்கெட் ராஜா திடீரென சென்னைக்கு வந்துள்ளார்.

ராக்கெட் ராஜா பிடிபட்டது எப்படி?

இதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்துப் பிடித்தனர். ராக்கெட் ராஜாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடன் தங்கியிருந்த வடக்கு பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சுந்தர் (31), பிரகாஷ் (25), மேற்கு தாம்பரம் சாஷசாய் நகரைச் சேர்ந்த நந்த குமார் (43), பாளையங்கோட்டை திருநகர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜ் சுந்தர் (23) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுர சேதுபதி மன்னர் வாரிசான கார்த்திக் என்பவரை சிங்கம்பட்டி ஜமீன் தங்கூர் மஹாஜன் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கடத்தினர். அந்த வழக்கில் சுந்தர், ராஜா சுந்தர், பிரகாஷ் ஆகிய மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகினர்.

தற்போது ராக்கெட் ராஜாவுடன் இவர்களும் கைதாகி இருப்பதால் அவருக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜாமீனில் வந்த மூவரும் ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் பதுங்கியது ஏன்?- கைது பின்னணி

தற்போது நெல்லை மாவட்ட எஸ்.பி.அருண்சக்தி குமார் மேற்பார்வையில், நாங்குநேரி ஏ.எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தலைமையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநில போலீஸார் இணைந்து ஆப்ரேஷன் "எஸ்"ஐ துவக்கியுள்ளனர். இந்த டீமில் தமிழகத்திலிருந்து எஸ்.ஐ. அசோகன், தலைமைக் காவலர் சாகர் , மும்பையிலிருந்து எஸ்.ஐ. அவினாஷ், கர்நாடகா மடிகேரி எஸ்.ஐ. சண்முகம் மற்றும் அங்கோலா கர்நாடகா எஸ்.ஐ. ஸ்ரீதர் ஆகியோர் இணைந்துள்ளனர். ஐந்து மொழிகள் தெரிந்ததும், அனைவரும் குற்றப் புலனாய்வுத்துறையில் திறமையானவர்கள் என்பதாலுமே இணைந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் ராக்கெட் ராஜாவை தீவிரமாகத் தேடி வந்தனர். மறுபுறம் ராக்கெட் ராஜாவின் எதிரி குமுளி ராஜ்குமார் குழுவினர் ராக்கெட் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டு தேடி வந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்கவே சென்னையில் பதுங்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கர்நாடக போலீஸாரும் தீவிரமாக தேடி வந்ததால் இரண்டு பேரிடமும் தப்பிக்க சென்னையில் பதுங்கியபோது தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை இந்த ஆப்ரேஷன் நடந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜா ராக்கெட் ராஜா ஆன கதை

ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் மகனான ராக்கெட் ராஜா படித்தவர். அவரது சகோதரர்கள் அனைவரும் படித்தவர்கள். இவரது சகோதரரான பாலகணேஷ் பாளையங்கோட்டை பேராசிரியரைக் கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் "காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் " கராத்தே செல்வினுடன் இயங்கிய ராக்கெட் ராஜா பின் நாளில் கராத்தே செல்வின் கொலைக்குக் காரணமாக இருந்ததாக கூறப்பட்ட கட்டத்துரை கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விடுதலை ஆனாவர்.

கடந்த 2009-ம் ஆண்டு திசையன்விளையில் ராக்கெட் ராஜாவின் வீட்டினை ஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் எஸ்.பி.தலைமையில் காவல்துறை சோதனை போட, அங்கு ஒரு ரைபிள், ராக்கெட் லாஞ்சர், ஏ.கே.47 துப்பாக்கிக்கு உபயோகப்படுத்தும் தோட்டாக்களைக் கைப்பற்றியது. ராக்கெட் லாஞ்சர் வைத்திருந்த காரணத்தால் அன்றுமுதல் ராஜா ராக்கெட் ராஜா ஆனார்.

மும்பையில் மார்வாடி மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்தார் ராக்கெட் ராஜா. கராத்தே செல்வின் நினைவு தினம், ஊர்க்கொடை திருவிழா என முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவ்வப்போது நெல்லைக்கு வந்து செல்வதாக தெரிவித்தனர்.

பிடிபட்ட ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் விசாரணைக்குப் பின் நெல்லை தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ராக்கெட் ராஜா மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

1996-ல் பெருமாள் புரத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ளார். பாளையங்கோட்டையில் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 2001-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் கொலை, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

43 mins ago

சினிமா

42 mins ago

இந்தியா

48 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்