மன்னார்குடி அருகே மெர்கன்டைல் வங்கியில் துப்பாக்கியை காட்டி நகை, பணம் கொள்ளை: சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் 80 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக்கு நேற்று மதியம் 2.30 மணி அளவில் வந்த 2 பேர், டிடி எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களிடம் கூறியுள்ளனர். மதிய உணவு இடைவேளை என்பதால் 3 மணிக்கு மேல்தான் டிடி எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வங்கியில் இருந்து வெளியேறிய இருவரும் அடுத்த சில நிமிடங்களில் மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு வங்கிக்கு மீண்டும் வந்தனர். அதில், ஒருவர் வங்கி மேலாளர் கோவிந்தராஜனிடம் சென்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வங்கியில் உள்ள பணத்தை எடுக்கச் சொன்னார். மற்ற நால்வரும் வங்கியின் காசா ளர் தியாகராஜனையும், எழுத்தர் கோடீஸ்வரனையும் தாக்கினர். மேலும், வங்கியின் லாக்கரை திறக்குமாறு மிரட்டினர்.

துப்பாக்கியால் சுட்டனர்

உடனே அவர்கள், லாக்கர் சாவியை கொடுத்தனர். ஆனால், அந்த சாவியைக் கொண்டு லாக்கரை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், லாக்கர் அறையில் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து, லாக்கரை திறந்து விடும்படி துப்பாக்கியைக் காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டினர்.

லாக்கரை திறந்தவுடன், நேற்று அடகு பிடிக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 80 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டனர். மேலும், பணம் வைக்கப்பட்டிருந்த கவுன்ட்டரை திறந்து அதிலிருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

வங்கியைவிட்டு வெளியே செல்லும்போது, வங்கிக்குள் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க் பகுதியை எடுத்துக்கொண்டு சென்றனர். கொள்ளையர்கள் சென்றபிறகு, வங்கியில் இருந்து வெளியே வந்த வங்கி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சத்தம் போட்ட பிறகே, வங்கியில் கொள்ளை நடந்த விவரம் அருகிலுள்ள வீடுகளில் இருந்தவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, மன்னார்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீ ஸார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், திருவாரூர் எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

4 தனிப்படைகள் அமைப்பு

விசாரணையில், கொள்ளையர்கள் 5 பேரும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததாகவும் நீலம், வெள்ளை, ஆரஞ்சு நிறத்தில் சட்டை அணிந்திருந்ததும், 5 பேரில் ஒருவர் திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா உள்ள இடங்களிலும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த வங்கியில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான போலி நகைகளை அடகு வைத்து மோடி செய்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

உலகம்

57 mins ago

ஆன்மிகம்

55 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்