ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்; அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திமுக, மதிமுக, தேமுதிக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக  தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013-ல் அந்த ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதா 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையின் 2018-2023 ஆண்டுக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது. இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன்கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது.

4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டைஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்கூறிய காரணங்களினால், உரிமம் புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைவழக்கறிஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார்.

தமிழக அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சர்வாதிகார தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டம்; அசம்பாவிதத்திற்கு முழு காரணம் உளவுத்துறையின் தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

வணிகம்

33 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

43 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்