ரூ.125 கோடியில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:

திண்டுக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தை புனரமைப்பு செய்யவும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத்தில் உள்ள வழியோர கிராமங்களுக்கு தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரை பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி,

1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், துhய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

இதேபோன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி,

1. பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப்படும்.

2. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

3. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

4. திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

6. சாலைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

7. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்