புதிய வேலைவாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தனியார் மூலம் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறை வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 94 லட்சத்து 58,161 ஆகும்.

வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கல்வித் தகுதியை பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், அவர்களுக்கு வேலை வழங்க அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் மிகவும் வேதனையளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி பெற்று வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 59,326 ஆகும். இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை 3 லட்சத்து 51,277ஆகும்.

பொறியியல் படித்த பல இளைஞர்கள் வேலை கிடைக்காததால் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு வேலை கிடைப்பது இப்போதுள்ள வேகத்தில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மை ஆகும்.

ஆசிரியர் படிப்பும், பொறியியல் பட்டமும் பெற்றுவிட்டால் வேலை உறுதி என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவி வரும் நிலையில், இப்படிப்புகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற படிப்புகளின் நிலையை கேட்கவே வேண்டாம்.

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்து வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 5248 ஆகும். அதன்பின் கடந்த 3 ஆண்டுகளில் 26 லட்சத்து 52,913 பேர் வேலை கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகும். இவர்களிலும் பெரும்பாலானோருக்கு தனியார் வேலை தான் கிடைத்தது; அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாகும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்; அ.தி.மு.க. அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை ஆகும். மாறாக, அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், தற்போது இது 10 லட்சத்திற்கும் கீழாக குறைந்து விட்டது. நாட்டின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படும் இளைஞர் சமுதாயத்தின் நலனுக்காக தமிழக ஆட்சியாளர்கள் செய்தது 10 ஆண்டுகளில் அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை 3 லட்சம் குறைத்தது தான்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒருகோடி பேர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தான் மாதம் ரூ.150 முதல் ரூ.300 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவது தான் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருமே தவிர, வாக்குகளை வாங்குவதற்காக அளிக்கப் படும் உதவிகள் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது தான் வரலாறு சொல்லும் உண்மை.

எனவே, இளைஞர்கள் சமுதாயத்தின் நலன் கருதி, அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக் கணக்கான பணியிடங்களை நிரப்பவும், பெருமளவில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தனியார் மூலம் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

மேலும்