தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்த மாணவன் தினேஷ் தேர்வில் வெற்றி: 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

By செய்திப்பிரிவு

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் இன்று வெளியான தேர்வு முடிவில் அனைத்துப்பாடங்களிலும் சிறப்பாக மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அதிகாலையில் ஓரு மாணவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பாளையங்கோட்டை போலீஸார் விரைந்து சென்று, அந்த மாணவரின் உடலை கீழே இறக்கினர். அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன.

அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் நல்லசிவன்(17) என்பதும், தந்தையின் குடிப் பழக்கத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்.

குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

தினேஷை மதுரையில் உள்ள அவரது சித்தப்பாதான் படிக்க வைத்தார். எஸ்எஸ்எல்சி வரை மதுரையில் தனது அத்தை நடத்தி வரும் பள்ளியில் அவர் படித்தார். விடுமுறையில் மட்டும் சொந்த ஊருக்கு அவர் வந்து செல்வது வழக்கம். எஸ்எஸ்எல்சியில் 464 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தொடர்ந்து, மேல்நிலைக் கல்வியை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.

கடந்த 30-ம் தேதி ஊருக்கு வந்த அவரிடம் இருந்து வேலை செய்து சம்பாதித்த பணத்தையும் பிடுங்கி மாடசாமி மது குடித்துள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மாடசாமி கேரளாவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தால் வேதனையில் இருந்த அவர், திருநெல்வேலி வந்து தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

நன்கு படிக்கும் மாணவரான தினேஷ் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். வறுமை ஒருபுறம், போராட்டமான குடும்பச் சூழல் மறுபுறம் என நெருக்கடிக்கு மத்தியிலும் நீட் தேர்வை திறம்பட எழுதுவதற்காக அவர் தன்னை தயார் செய்து வந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில் இன்று பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியானது. மன வருத்தம் இருந்தாலும் தினேஷின் தேர்வு முடிவை சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் வாங்கி பார்த்தனர். தினேஷ் பிளஸ்டூவில் 1024 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:

தமிழ் - 194

ஆங்கிலம் - 148

இயற்பியல் - 186

வேதியியல் - 173

உயிரியல் - 129

கணிதம் - 194

மொத்தம் - 1024

இந்த தகவலை தினேஷின் மாமா சங்கரலிங்கம் வருத்தத்துடன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்