வடபழனி அர்ச்சகர் மனைவி கொலையில் திருப்பம்: கணவரே சுத்தியலால் தாக்கிக் கொன்றது அம்பலம்: நண்பரும் கைதானார்

By செய்திப்பிரிவு

வடபழனியில் அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கணவரே திட்டமிட்டு மனைவியைக் கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது. சாமர்த்தியமாகக் கொலை செய்து மறைக்க முயன்ற கணவரையும், உடந்தையாக இருந்த அவரது  நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

கொலை சம்பவம்:

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் பாலகணேஷ் (40). இவரது மனைவி ஞானப்பிரியா (35). இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரது சொந்த ஊரும் காஞ்சிபுரம் ஆகும். பாலகணேஷ் சென்னை வடபழனி சிவன் கோயிலில் குருக்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

பாலகணேஷும் அவரது மனைவி ஞானப்பிரியாவும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் ஒண்டுக்குடித்தனத்தில் முதல் தளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தனர். கடந்த 4-ம் தேதி இரவு வழக்கம்போல் அனைவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலை அதே தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கழிப்பறைக்குச் சென்ற போது குளியலறையின் உள்ளே பாலகணேஷ் கைககள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பாலகணேஷின் மனைவி ஞானப்பிரியாவுக்கு தகவல் சொல்வதற்காக அவரது வீட்டுக்கதவைத் தட்டியபோது அது திறந்தே கிடந்தது. சாத்திய வீட்டின் உள்ளே பாலகணேஷின் மனைவியின் கைகள் கட்டப்பட்டு தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமி உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீஸார் கைகள் கட்டப்பட்டு மயக்கமாக கிடந்த பாலகணேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  ஞானப்பிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணை

கொலை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஞானப்பிரியாவின் 15 சவரன் நகைகளும் சில பட்டுப்புடவைகளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை 2 மணிக்கு மேல் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

பல குடித்தனங்கள் உள்ள ஒரு நெருக்கமான இடத்தில் கொள்ளையர்கள் எப்படி வந்தார்கள், ஞானப்பிரியா தாக்கப்பட்ட போதும், பாலகணேஷ் தாக்கப்பட்டபோதும் யாருக்கும் சத்தம் கேட்காதது ஏன், சில சவரன் நகைகளுக்காக ஞானப்பிரியா ஏன் கொலை செய்யப்பட வேண்டும், நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்து நகைக்காக கொலை போன்று திசை திருப்பும் வேலை நடக்கிறதா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் சந்தேகம்

ஞானப்பிரியாவின் கணவர் பாலகணேஷ் மயக்கமாக இருந்ததால் போலீஸாருக்கு முதல்கட்ட விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் போலீஸாருக்கு கணவர் மீது சந்தேகம் இருந்து வந்தது. பின்னர் பாலகணேஷிடம் விசாரிக்கும் போது அவர் கூறிய தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.

கதவைத் தட்டியவர்கள் திறந்தவுடன் தன்னைத் தாக்கினார்கள். அதில் நான் மயக்கமாகி விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். தலையில் அடித்தவுடன் நீங்களோ உங்கள் மனைவியோ சத்தம் போடவில்லையா என்று கேட்டபோது பதில் சொல்லவில்லை.

அதன் பின்னர் போலீஸாருக்கு இன்னொரு சந்தேகம் ஏற்பட்டது. திருட வருபவர்கள் முதலில் கணவரைத் தாக்கினார்கள். பின்னர் மனைவியைத் தாக்கியிருந்தால் அவர் இறந்து போன பின்னர் ஏன் கட்டிப்போட வேண்டும், அல்லது கட்டிப்போட்டு நகைகளை திருட வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் ஏன் கணவரை மட்டும் கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொடூரமாகக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் போலீஸாருக்கு சந்தேகம் இருந்தது.

பொய் சொன்ன கணவர்

 பாலகணேஷ் கொள்ளையர்கள் வந்ததாக கூறிய நேரத்தில் பக்கத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது அதில் 2 மணிக்கு மேல் அதிகாலை வரை வெளியாட்கள் யாரும் வராதது தெரியவந்தது. ஆனால் இரவு 12 மணி அளவில் பாலகணேஷின் நண்பரும் புரோகிதருமான மனோஜ் என்பவர் வந்து செல்வது தெரியவந்தது. அதுகுறித்துக் கேட்டபோது வழக்கமாக வருவார். அவர் போன பின்னர் தான் இந்த சம்பவமே நடந்தது என பாலகணேஷ் கூறியிருந்தார்.

சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த முக்கிய துப்பு

பாலகணேஷின் வாக்குமூலத்தில் பல முரண்கள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரின் செயல்களும் செயற்கையாக இருப்பதையும் பார்த்த போலீஸார் பாலகணேஷிடம் பெற்ற வாக்குமூலத்தை வைத்தே மேலும் சந்தேகமடைந்துள்ளனர்.

தன்னைத் தாக்கிய கொள்ளையர்கள் தன் கைகளைக் கட்டி பாத்ரூமில் போட்டதாக கூறியிருந்தார். அவரைத் தாக்கியப ின்னர் வெளியில் உள்ள பாத்ரூமில் கொள்ளையர்கள் கட்டி போட்டபின்னர் வீட்டுக்குள் ஞானப்பிரியா கொலை செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் பாலகணேஷின் உடையில் ரத்தத் துளிகள் இருந்தன. அதையும் ஞானப்பிரியாவின் ரத்தத்தையும் சோதனைக்கு அனுப்பியபோது அது இரண்டும் ஒன்று என முடிவு வந்ததும் ஞானப்பிரியாவின் கொலையில் பாலகணேஷிற்கு தொடர்பு இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். ஞானப்பிரியாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் கொலை நடந்த நேரம் இரவு 11.30 மணியிருந்து 12.30 மணிக்குள் இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இவை போதாதா போலீஸாருக்கு உடனடியாக பாலகணேஷை மேலும் தீவிரமாக விசாரிக்க அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். தனது மனைவியை தானே சுத்தியலால் அடித்துக்கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

கொலை எப்படி நடந்தது?

ஞானப்பிரியாவுக்கும் தனக்கும் திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதைப் பெரிய குறையாக கூறி ஞானப்பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்தார். இதனால் நிம்மதியே இல்லை. என் நண்பரும் சுப காரியங்களுக்கு புரோகிதம் செய்யும் மனோஜ் என்பவரிடம் இதுபற்றி கூறி வருத்தப்பட்டுள்ளேன்.

இனியும் அவள் இப்படிப் பேசினால் கொன்றுவிடுவேன் என்று ஆத்திரத்தில் கூறினேன். கடந்த 4-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் மீண்டும் எனக்கும் என் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தேன். பிறகுதான் என் தவறு புரிந்தது. பின்னர் என் நண்பர் மனோஜுக்கு போன் செய்து வரவழைத்தேன்.

திருடர்கள் வந்து நகைக்காக ஞானப்பிரியாவை கொன்று விட்டு என்னையும் தாக்கி கட்டிப்போட்டுவிட்டுச் சென்றது போல் சாட்சியத்தை உருவாக்கினோம். 15 சவரன் நகைகள், சில பட்டுப்புடவைகளை மனோஜிடம் கொடுத்து, என்னைக் கட்டிப்போட்டுவிட்டு சென்றுவிடுமாறு சொன்னேன். அதே போல் மனோஜ் செய்தார்.

ஆனாலும் கொலை செய்யும்போது தெறித்த ரத்தத் துளிகள் என் தோள்பட்டை, தலைமுடியின் பின்புறம் என்னை அறியாமல் பட்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. போலீஸார் என்னை சோதித்தபோது ரத்தத்துளிகள் என் உடலில் சில இடங்களில் பட்டிருப்பதை சேகரித்தனர். மேலும் ஞானப்பிரியாவைக் கட்டிய போது அவரது உடலில் சில இடங்களில் எனது கைரேகை சிக்கியது. மேலும் பீரோவில் எனது கைரேகையும், மனோஜிடம் பேசிய போன் காலில் நான் கொலை செய்துவிடுவேன் என்று பேசியதும் தெரிந்துவிட்டது, அது என்னைக் காட்டி கொடுத்துவிட்டது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நண்பர் கைது, நகை புடவைகள் பறிமுதல்

பாலகணேஷின் வாக்குமூலத்தை அடுத்து அவரது நண்பர் புரோகிதர் மனோஜை (30) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஞானப்பிரியாவின் நகைகள், பட்டுப்புடவைகளைக் கைப்பற்றினர். சிறிய குடும்ப விவகாரத்தை கையாளும் வகை தெரியாமல் மனைவியை கணவரே கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையும் செய்து மனைவிக்கு இறுதி மரியாதையும் செய்த பாலகணேஷ்

கொலை நடந்த மறுநாள் போலீஸார் பாலகணேஷை விசாரிக்க போலீஸார் சென்ற போது மனைவிக்கு பால் ஊற்றுவது முதல் பல இறுதி சடங்குகள் உள்ளன. அதை முடித்துவிட்டு வருகிறேன், என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். போலீஸார் மன்னிப்பு கேட்டுத் திரும்பி விட்டனர். மூன்று நாட்கள் கழித்து தடயங்கள் வலுவாக கிடைத்தவுடன் போலீஸார் அவர்கள் பாணியில் விசாரித்தபோது சிக்கிவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

க்ரைம்

28 mins ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்