சோழிங்கநல்லூரில் பன்னோக்கு இஎஸ்ஐ மருத்துவமனை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: தமிழிசை

By செய்திப்பிரிவு

சென்னை: தென் சென்னை தொகுதி தேர்தல் அறிக்கையில், குடிநீர் மற்றும் மழைநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை `அக்கா 1825' என்ற தலைப்பில் மயிலாப்பூரில் நேற்று வெளியிட்டார். பாஜக மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேர்தல் அறிக்கையில், தென் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்றுநீர் சென்னைக்கு கொண்டு வரப்படும். மத்திய நீர்வள அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்து குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், பெரும்பாக்கம், சித்தலாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 25 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.

முக்கியமாக சோழிங்கநல்லூரில் இருந்து ஒக்கியம் மடுவு வரை, பள்ளிக்கரணையில் இருந்து துரைப்பாக்கம் 200 அடி சாலை வழியாக பக்கிங்காம் கால்வாய் வரை, மேடவாக்கம் பகுதியில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வரை மழைநீர் செல்ல மிகப்பெரிய அளவில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படும்.

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தவும், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட ஏரிகளை தூய்மைப்படுத்தி அங்கு படகுக் குழாம்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். போக்குவரத்து நெரிசலை குறைக்க 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவாக முடிக்கவும், புதிய வழித்தடத்தில் 3-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சைதாப்பேட்டை ரயில் நிலையம் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும். சென்னை - கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்தும் ஏற்படுத்தப்படும்.

இதுதவிர தி.நகரில் வர்த்தக மையம், மயிலாப்பூரில் ஆன்மீக, கலை மற்றும் அறிவியல் மையம், சோழிங்கநல்லூரில் புதிதாக பன்னோக்கு இஎஸ்ஐ அரசு மருத்துவமனை, மீன்வளத்தை பெருக்குவதற்கான ஆராய்ச்சி நிலையம், வடபழனி, திருவான்மியூர், தி.நகர் போன்ற பேருந்து நிலையங்களை புதுப்பித்தல், ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், பணி செய்யும் மகளிருக்கு விடுதி மற்றும் மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள், மீனவர்களுக்கு மீனவர் நல அமைப்பு, மீன் விற்பனை சந்தை, கருவாட்டு தளங்கள், மீனவ பெண்களுக்கு வங்கி கடன் அளிக்கும் ‘மீனவ அக்கா குழுக்கள்’ ஆகிய அம்சங்கள், வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், “ தென் சென்னையை அனைவரும் வளர்ச்சி அடைந்த சென்னையாக பார்க்கிறோம். ஆனால் குப்பை நிறைந்த, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாகவே இன்றும் உள்ளது. நான் எம்.பி. ஆனதும் முதல் வேலையாக தென்சென்னையில் மண்டல வாரியாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காத சென்னையாக மாற்றுவேன். மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வந்து இந்த தொகுதியை வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாக்குவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்