தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் நாளை மாலை பிரச்சாரம் ஓய்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, அமைதி பிரச்சாரம் உட்பட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை.

தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தை பொருத்தவரை 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வரும் 19-ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 39 மக்களவை தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுவதால், தேசியமற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரம் முன்னதாக என்ற அடிப்படையில், நாளை (ஏப்ரல் 17, புதன்கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த அகஸ்தியர்பட்டியில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசினார்.நீலகிரி அடுத்த தாளூரில் விவசாயிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

இறுதி கட்டமாக முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று வடசென்னை, திருவள்ளூர் தொகுதிகளிலும், இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், நாளை இறுதியாக தென்சென்னை, மத்திய சென்னையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தென்சென்னை, மத்திய சென்னையிலும், இன்று ஸ்ரீபெரும்புதூரிலும், நாளை திருவள்ளூரிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மற்ற தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்காக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவதால், 17-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அந்த நேரத்துக்குள் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு, அமைதி பிரச்சாரம் உள்ளிட்ட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை. தவிர,மாலை 6 மணிக்கு மேல் அந்தந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்