‘ஸ்டார் தொகுதி’ மதுரை கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மீனாட்சியம்மன் கோயில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்கள் கொண்டதால் ஒரு புறம் ஆன்மிகச் சிந்தனை கொண்ட நகராகவும், மற்றொரு புறம் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கையும், பலத்தையும் எடைபோட்டு பார்க்கக்கூடிய அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கக் கூடிய நகராகவும் மதுரை திகழ்கிறது.சுற்றுலா, மருத்துவம், விவசாயம், உணவுப்பொருட்கள் தயாரிப்பு, சிறு, குறுந் தொழில்கள், நெசவு, வர்த்தகம் போன்றவை முக்கிய தொழில்களாக உள்ளன.

மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன. மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தலா ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் 8 முறை வென்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இடதுசாரிகள் உள்ளன.

இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரய்யா போன்றோர் எம்பிக்களான தொகுதி இது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கக்கன் போன்றோர் இந்தத் தொகுதியில் களம் கண்டுள்ளனர். சுப்பிரமணியன் சுவாமி, மு.க.அழகிரி ஆகியோர் இந்த தொகுதி மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில், மாநிலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடிய தொகுதி என்பதால் மதுரை தொகுதியின் வெற்றி, தோல்விகளை அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தல்களிலும் உற்றுநோக்குகின்றன. மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொடர்ந்து திமுக 5 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கட்சிகளின் ஆதிக்கமும், மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமும் நிலவும் வித்தியாசமான வரலாறு கொண்ட தொகுதியாக மதுரை உள்ளது.

இந்தத் தேர்தலில் மதுரை தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளரும் தற்போதைய எம்பியுமான சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் பா.சரவணன், பாஜகவேட்பாளர் ராம.சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோ.சத்யாதேவி ஆகியோருக்கு இடையேதான் போட்டி உள்ளது.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அவரது கட்சியினர் மட்டுமில்லாது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் பலமும், தீவிர பிரச்சாரமும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளன.

சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், உதயநிதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து சென்றது அவருக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது.

அதிமுக வேட்பாளரான மருத்துவர் பா.சரவணனுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப மண்டலச் செயலாளர் ராஜ்சத்யன் போன்றோர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

மருத்துவர் சரவணன், திரைப்படங்களில் நடித்தும், தயாரித்தும் உள்ளதால் சில திரை பிரபலங்களும் அவருக்காக மதுரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். இவற்றோடு அதிமுகவுக்கு மதுரையில் உள்ள பாரம்பரிய வாக்கு வங்கி அவருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, அமித் ஷா, டிடிவி. தினகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். மாநில அரசின் மீதான அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்யும் வகையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவி கட்சியினருடன் இணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி, தமிழர், தமிழ்நாட்டின் நலம் போன்ற முழக்கங்களை முன்வைத்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நீண்ட நாள் கோரிக்கைகள்: ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதலே விமானநிலையம் இருந்தாலும், சர்வதேச விமானநிலையமாக தரம் உயர்த்தப்படாததும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக் கூடிய பெரும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வராததும் இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன.

படித்த இளைஞர்கள் இன்னும் வேலைதேடி பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், ஒசூர் நகரங்களுக்கு இடம்பெயரும் நிலை தொடர்கிறது.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டம், பஸ்போர்ட், ஐ.டி. பார்க் போன்ற மதுரைக்கு அறிவித்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராதது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

1 min ago

தமிழகம்

30 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

வணிகம்

37 mins ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

20 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்