காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை: ஐநாவுக்கு வைகோ கடிதம்

By செய்திப்பிரிவு

காவிரி பிரச்சினையில் தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழிடங்களைத் தூய்மைப்படுத்தல் ஆணையராக லியோ ஹெல்லர் பொறுப்பு வகித்து வருகின்றார். காவிரி பிரச்சினை குறித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கும், தலைநகர் சென்னைக்கும் குடிநீர் வழங்கும் காவிரி நதிநீர் உரிமையை, பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற உரிமையை, கர்நாடக அரசு தடுக்கின்ற அநீதிக்கு இந்திய அரசு துணைபோவதால், மனித உரிமைகள் ஆணையத்தில் செயல்படும் லியோ ஹெல்லர் தலையிட்டு, இந்திய அரசுக்கு அறிவுறுத்துவதற்காக, கோரிக்கை கடிதத்தை வைகோ சமர்ப்பித்துள்ளார்.

இக்கடிதம் ஏப்ரல் 25 ஆம் தேதி மின்னஞ்சலில் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டு, ஜெனீவாவில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் அதனை நேரடியாக, லியோ ஹெல்லரிடம் வழங்கினர்.

தமிழ்நாட்டில் இருந்து, காவிரி பிரச்சினையில் அக்கறை உள்ள பலரும் இதுபோன்ற மனுக்களை அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து இயன்ற நடவடிக்கை எடுப்பதாக லியோ ஹெல்லர் உறுதி அளித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வைகோ அனுப்பிய கடிதத்தின் விவரம்:

“இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கி வருகின்ற காவிரி பாதுகாப்பு இயக்கம், காவிரி பாசன விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் பாடுபட்டு வருகின்றது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.

காவிரி ஒரு பழமையான நதி. சென்னை மாகாண எல்லைக்குள், குடகு மலையில் உற்பத்தியாகின்றது. 1956 ஆம் ஆண்டு, தென் இந்திய மாநிலங்களின் எல்லைகள் மறுசீரமைப்பின்போது, குடகு மாவட்டம், கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் 2.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசனம் பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக, 81,155 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காவிரி நீரால் பயன்பெறுகின்றது. ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, அர்காவதி, லட்சுமண தீர்த்தம், நொய்யல் ஆகியவை காவிரியின் கிளை ஆறுகள் ஆகும்.

கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குக் கோடியில் உற்பத்தியாகும் காவிரி, தென் கிழக்காக 800 கிலோமீட்டர்கள் பாய்ந்தோடி, வங்கக் கடலில் கலக்கின்றது. பெரிய அளவில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; நீர் மின் நிலையங்கள் அமைத்து மின்சாரம் பெறப்படுகின்றது.

பலநூறு ஆண்டுகளாக காவிரி நீர் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பண்டைக்காலப் பேரரசுகள், இன்றைய புது நகரங்கள் அனைத்திற்கும் காவிரி நீரே குடிநீர் ஆதாரமாகவும், உயிர்நாடியாகவும் திகழ்கின்றது.

ஹெல்சிங்கி விதிகளின்படி, ஒரு ஆற்றின் மேல்மடை மாநிலத்திற்குள்ள உரிமை போலவே, கடைமடைப் பகுதிக்கும் உரிமை உண்டு; அதை மேல்மடை மாநிலம் மறுதலிக்க முடியாது.

நைல், ரைன், சிந்து ஆகிய நதிகள், பங்கீட்டில் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி, பல நாடுகளின் வழியாகப் பாய்ந்து ஓடுகின்றன.

1924 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையும், தமிழ்நாட்டில் மேட்டூர் அணையும், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

ஆனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒப்புதல் எதுவும் பெறாமல், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில் கர்நாடக அரசு மூன்று புதிய அணைகளைக் கட்டியது.

இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முறையிடப்பட்டது. இதற்கு இடையில், இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் 26 முறை நடைபெற்ற பேச்சுகள், எவ்வித முடியும் எட்டாமல் தோல்வி அடைந்தன.

இந்திய அரசியல் சட்டத்தின் 262 (1) ஆவது பிரிவு, இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டுப் பேசி முடிவு காண வேண்டும் என்று கூறுகின்றது.

அதன் அடிப்படையில், இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டம், 1956 ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதன்படி, ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில், 1990 ஆம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றத்தை, இந்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, 1990 ஜூன் 2 ஆம் நாள், மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழக, கர்நாடக அரசுகள், தங்கள் தரப்புக் கோரிக்கையை, நடுவர் மன்றம் முன்பு வைத்தன. அதன்பிறகு, நடுவர் மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் காவிரி நதிநீர் பாசனப் பரப்பு முழுமையும் நேரில் ஆய்வு செய்தனர்.

1991 ஜூன் 25 ஆம் நாள், தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறு நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. நடுவர் மன்ற உத்தரவின்படித் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கவும் இல்லை. அதற்கு மாறாக, கர்நாடக அரசு புதிதாக ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல் இழக்க வைத்திட முயற்சித்தது. ஆனால், இந்திய உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என அறிவித்ததுடன், கர்நாடக அரசுக்குக் கண்டனமும் தெரிவித்தது.

பல நூறு ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அந்த மாநிலச் சட்டங்களை மதித்து நடக்கின்றனர். 1990 களில், காவிரி நதிநீர்ப் பிரச்சினையால், சில கன்னட அமைப்புகளால், தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், அதுபோன்ற தாக்குதல் எதுவும், தமிழகத்தில் வாழும் கன்னட மக்கள் மீது நடத்தப்படவில்லை.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் 6(2), 1956 பிரிவின்படி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாகும்.

பக்ரா-பியாஸ் நதிநீர் மேலாண்மை வாரியம் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசு, காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை 6 ஆண்டுகளாக, அரசிதழில் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அரசாணையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்பிறகும் கூட, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி, இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்குப் புதிதாக ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கி இருந்த காவிரி நீரில் மேலும்14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்துவிட்டது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட, 19 மாவட்டங்களுக்குக் காவிரி நீர்தான் குடிநீர் ஆகும். தமிழகத்தின் இரண்டரை கோடி மக்கள், உயிர் வாழக் காவிரி குடிநீரையை நம்பி உள்ளனர். இந்த நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், கர்நாடக அரசு, மேகதாது, ராசி மணல் ஆகிய இரண்டு இடங்களில் காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றது.

அப்படி இந்த அணைகளைக் கட்டி விட்டால், அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் வராது. 25 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும். தமிழகத்தின் பசுமையான காவிரி தீரப் பகுதிகள் காய்ந்து பாலை மணல்வெளி ஆகும். அதனால் ஏற்படக்கூடிய பேரபாயத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், அதன்பிறகு, கர்நாடக அரசு புதிய அணைகளைக் கட்டமுடியாது. தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும், நீதி நிலைநாட்டப்படும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், இந்திய அரசு, கபட நாடகம் ஆடுகின்றது; இரட்டை வேடம் போடுகின்றது; தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.

எனவே, இப்பிரச்சினையில் ஐநா தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவும், குடிநீர் வழங்கவும் தமிழகத்தின் பாசனப் பரப்பைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வைகோ எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்