‘‘கோரிக்கை பயன் தராது; போராட்டத்தின் மூலம் தான் சாதிக்க முடியும்’’ - அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் முழு அடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை அமைதியாக நடத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு வலியுறுத்தியும் காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், ஏராளமான அமைப்புகளும் ஆதரவு அளித்திருப்பது மிகுந்த மனநிறைவளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு இழைத்த துரோகம் மன்னிக்க முடியாதது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்து, அதன் முடிவில் 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதித்து செயல்படுத்துவது தான் அரசியலமைப்புச் சட்டத்துக்கு மரியாதையளிக்கும் செயலாக அமைந்திருக்கும்.

ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை அறியாமை காரணமாக மத்திய அரசு தாமதித்தால் அதுபற்றி எடுத்துக்கூறி புரியவைக்கலாம். ஆனால், மத்திய அரசுக்கு பலமுறை அழுத்தம் கொடுத்தும் கர்நாடகத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்காகத் தான் மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது எனும்போது இனியும் கோரிக்கைகளை மட்டுமே விடுத்துக் கொண்டிருப்பது பயனளிக்காது; மாறாக மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் சாதிக்க முடியும்.

அதனால் தான் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக போராடும் கடமை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டம் காவிரி பாசனப் பகுதிகளுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான போராட்டம் என்பதையும், இது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. நமது உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான போராட்டம் என்பது குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் கைகோர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள் நலன்களை பாதுகாப்பதற்கான உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போராட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும், தொல்லையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். போராட்டத்தின் போது சிறு அசம்பாவிதமோ, வன்முறையோ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மக்களின் எழுச்சிக்கு பணிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கேற்ற வகையில் முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தத்தை அமைதியாக நடத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்”

என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்