மேடை அலங்கார உரிமையாளர் உயிரிழப்பு சம்பவத்தில் அதிமுக எம்எல்ஏ-வை கைது செய்யக்கோரி மறியல்

By செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மேடை அலங்கார உரிமையாளர் வசந்த மணி நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக, எம்எல்ஏ-வை கைது செய்ய வலியுறுத்தி வசந்தமணியின் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது :

தி.மலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் வசந்தமணி (41). மேடை அலங்காரம் தொழில் செய்து வந்தார். கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், சமீபத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்கான மேடை அலங்காரத்தை வசந்தமணி செய்தார். மேடை அலங்காரத்துக்கான தொகையை கொடுக்காமல் எம்எல்ஏ பன்னீர்செல்வம் காலம் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், சில நாட்கள் முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி போளூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில், பங்கேற்கச் சென்ற பன்னீர்செல்வத்திடம் மன்னிப்பு கோருவது போல் சென்ற வசந்தமணி திடீரென எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் வசந்தமணியை திருப்பித் தாக்கி, போளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, கடந்த மாதம் 22-ம் தேதி போளூர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின்பேரில் வசந்தமணியை காவல் துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் வசந்தமணியின் தலையில் ரத்தம் கட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த மாதம் 26-ம் தேதி வசந்தமணிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த வசந்தமணி நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக, பாகாயம் காவல் நிலையத்தில் சிறை அலுவலர் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில், வசந்த மணியின் மனைவி சுனிதா மற்றும் அவரது உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் போளூர் பேருந்து நிலையத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தனது கணவரின் இறப்புக்கு காரணமான எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், எம்எல்ஏ-வை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றார்.

இதையடுத்து, தி.மலை வருவாய் கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், நேற்று நண் பகல் 12 மணி அளவில் தொடங்கிய மறியல் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதுகுறித்து சுனிதா கூறும்போது, ‘‘பணம் கேட்க சென்ற எனது கணவரை, எம்எல்ஏவும் அவரது ஆட்களும் தாக்கியுள்ளனர். இதனால், தான் எனது கணவர் உயிரிழந்தார். எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேர் மீது போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த மாதம் 26-ம் தேதி சுனிதா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அதில், எம்எல்ஏவின் ஆட்கள் என்றுதான் குறிப்பிட்டு விசாரித்து வருகிறோம்.

வசந்தமணி இறந்தது குறித்து, வேலூர் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தவுள்ளார். எனவே, அவரிடம் சென்று புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினோம். இந்த வழக்கில் நீதிபதி யின் அறிக்கையின்படியே வழக்கின் விசாரணை மாற்றியமைக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

48 mins ago

ஜோதிடம்

51 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்