“பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் அதிமுக போட்ட பிச்சை” - சி.வி.சண்முகம் காட்டம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: "அதிமுக போட்ட பிச்சையால் தமிழகத்தில் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அண்ணாமலை யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். இன்னொருமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து" என்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

விழுப்புரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் பேசியது: "திமுக அமைச்சர்கள் தங்கள் மேல் உள்ள வழக்குகளைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். துறை ரீதியாக என்ன நலத்திட்டங்களை செய்யலாம் என பேசுவதில்லை. பேயறைந்தது போல அவர்கள் உள்ளனர்.

பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் அமைச்சர் பொன்முடி தேர்தல் விதியை மீறி நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய 100 மீட்டரை கடந்து காரில் கட்சிக் கொடி, சின்னத்துடன் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சிக்கு உடந்தையாக உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.

உதயநிதி மேல் கர்நாடகா, உத்தரப் பிரதேசதம் உள்ளிட்ட ஏதோ ஒரு மாநிலத்தில் வழக்கு தொடுப்பார்கள். அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. முன்பெல்லாம் மத்திய அரசை விமர்சித்து பேசுவார். இப்போது பேசுவதில்லை. வாயாலே வளர்ந்த திமுக அதே வாயாலே அழியப்போகிறது.

இந்தத் தேர்தலுக்கு மேல் யார் யார் எங்கு இருப்பார்கள் என்றே தெரியாது. 2ஜி வழக்கில் பாஜகவின் மேல்முறையீட்டு மனு 6 வருடத்துக்கு பின் ஏற்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு ஆகியோர் நிலைக்குழு தலைவர்களாக உள்ளனர். ஆனால் இங்கு பாஜகவை எதிர்ப்பு பேசுகின்றனர். திமுக கூட்டணியான விசிகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜவுக்கு அளிக்கும் வாக்காகும்.

மீண்டும் மோடி என்கிறார் அண்ணாமலை. நாங்கள் வேண்டாம் என்கிறோம். அதிமுக போட்ட பிச்சையால் தமிழகத்தில் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அண்ணாமலை யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து. தேர்தல் வந்தால்தான் மோடி தமிழகம் வருவார்.கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் சமுதாயம் போதையில் தள்ளப்பட்டுள்ளது.

ரூ 2 ஆயிரம் கோடிக்கு போதை மருந்து கடத்தலில் கைது செய்யப்பட்டவர் திமுகவின் அயல்நாடு பிரிவு நிர்வாகியாக உள்ளார். அவர் கென்யாவில் திமுகவை வளர்த்து ஸ்டாலினை அங்கு பிரதமராக்க போகிறாரா? வெளிநாட்டுக்கே ரூ 2000 கோடிக்கு கடத்தல் என்றால் தமிழகத்துக்குள் எவ்வளவு பரவி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதைப்பற்றி பேசினால் ஆர்.எஸ்.பாரதி வழக்கு போட உள்ளதாக கூறுகிறார். ஆனால், இன்னமும் வழக்கு போடவில்லை. ஏன் போடவில்லை?

தமிழகம் போதை மாநிலமாக மாறிக்கொண்டுள்ளது. இதை தடுக்கவில்லை என்றால் தமிழகம் இன்னொரு பஞ்சாப் ஆக மாறிவிடும். ஆளுநரிடம் அளித்த கோரிக்கையில் இது குறித்து தெரிவித்துள்ளோம். 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை.

டாஸ்மாக் மதுவையும் அங்கு விற்பனை செய்யும் தண்ணீரையும் ஸ்டாலின் குடும்பம்தான் விற்பதாகவும், இந்த திமுக அரசு தண்ணீர் அரசு எனவும் மக்கள் கூறுகின்றனர். திருக்குறளை கடந்த 10 ஆண்டுகளாக தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தும் அதை நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழகம் வந்தால் பிரதமர் திருக்குறளை சொல்வார். தனிமனித சுதந்திரம் காப்பாற்ற இரட்டை இலை வெற்றி பெற வேண்டும்" என்று சி.வி.சண்முகம் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

மேலும்