களைகட்டியது தேனி தொகுதி: உள்ளூர் வேட்பாளர்களால் உற்சாகம் அடைந்த கட்சியினர்!

By என்.கணேஷ்ராஜ்

கம்பம்: தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளூர் வேட்பாளர்களையே திமுக, அதிமுக கட்சிகள் தேர்வு செய்துள்ளதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வேட்பாளர் வரவேற்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

கட்சிப் பணியில் முனைப்புடன் செயல்படும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் மற்ற தொண்டர்களுக்கும் உற்சாகம் ஏற்பட்டு கட்சி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவர். இது தவிர ஆதரவு அதிகம் உள்ள தொகுதிகளில் வெளியூர் விஐபி வேட்பாளர்களும் களம் இறங்கும் நிலையும் உள்ளது. உறுதியாக வெற்றி கிடைக்கும் என்பதால் பல விஐபிகள் இதுபோன்ற நடைமுறையைக் கடைப் பிடிப்பது வழக்கம்.

தேனி மாவட்டத்தைப் பொருத்தளவில் 1977-ம் ஆண்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இங்கு 1984-ல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். அடுத்தடுத்து ஜெயலலிதா 2 முறை ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றார். நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒருமுறை போடியில் போட்டியிட்டார்.

இது போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியதால் தேனி மாவட்டம் தமிழக அளவிலான கவனத்தை ஈர்த்தது. கடந்த சில தேர்தல்களில் வெளியூர் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூண்ரஷீத், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வெளியூர் வேட்பாளர்களால் அத்தொகுதி விஐபி அந்தஸ்தைப் பெற்றாலும் வெற்றி பெற்றதும் சிலர் சொந்த ஊருக்குச் சென்று விடுவதால் தொண்டர்களிடையே சுணக்கம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ‘மண்ணின் மைந்தர்களையே’ களத்தில் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்தவர்.

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்ட வி.டி.நாராயணசாமி கண்டமனூர் அருகே உள்ள கோவிந்த நகரத்தைச் சேர்ந்தவர். இவரும் பல ஆண்டுகளாக இங்கு கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூர் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பாளர் வரவேற்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் தேனி மக்களவைத் தொகுதி களைகட்டி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

சுற்றுச்சூழல்

16 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்