புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: இருவர் சிக்கியது எப்படி? - முழு விவரம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இரண்டு பேர் பிடிபட்டனர். முன்னதாக, கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி பல இடங்களில் போராட்டம் வெடித்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சிறுமியை தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை.

சிறுமியை விரைந்து மீடகக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். 20-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது மாயமான சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீஸாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே 5 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. பதற்றம் அதிகரிக்கவே புதுச்சேரிக்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவத்தினர் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில், ஒரு தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் காவல் நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை கைது செய்யவதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற அவர்கள் இரவு சுமார் 7.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொலையாளிகளை பிடிக்க போலீஸார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்திய நிலையில் இன்று முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டியதோடு, உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டு உள்ளே இழுத்துவிட்டு சென்றுள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே முழு உண்மை தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் குறிப்பிட்டனர்.

இதனிடையே, சிறுமியை கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கைக் கோரி முத்தியால்பேட்டை சின்ன மணிகூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் இசிஆர் சிவாஜி சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடற்கரை சாலை நேரு சிலை அருகே உள்ள சிறு வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர்.

இசிஆர் சிவாஜி சிலை சந்திப்பில் பொதுமக்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜிவ் காந்தி சதுக்கத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் சாலைகளில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

உருளையன்பேட்டை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்கள் கொலையாளிகளை துாக்கில் போட வேண்டும் என கோஷமிட்டனர். அந்நேரத்தில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தார். இதனால் பெண்களை போலீஸார் தள்ளினர். ஆனாலும் பெண்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

கடற்கரை காந்தி சிலை அருகில் மாணவர்கள், இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கிசென்றனர். இதுபோல் பல இடங்களில் போராட்டம் நடந்தது.

நேரு சிலைக்கு பின்புறம் இருந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை பாரதி பூங்கா அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வானூர் பகுதியில் இருந்த இளைஞர்கள் பட்டானூரில் இருந்து பேரணியாக வந்து தமிழக - புதுச்சேரி எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல் புதுச்சேரியின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சிறுமியின் உடல் ஒப்படைப்பு: இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், நமச்சிவாயம் உடனிருந்தனர். அதே நேரத்தில் அங்கிருந்த எம்எல்ஏக்கள் நேரு, சம்பத், பிரகாஷ்குமார் மற்றும் சமூக அமைப்பினர் கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்பின்னர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்