‘பிரதமரின் சூரியவீடு’ திட்டம்: ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க மின்வாரியம் இலக்கு

By ப.முரளிதரன்

சென்னை: ‘பிரதமரின் சூரியவீடு: இலவச மின்சாரம்’ திட்டத்தை தமிழகத்தில் முழுவீச்சில் செயல்படுத்தும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்வாரியத்துக்கு 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு செலவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பொதுமக்களும் இத்திட்டத்தில் பயனடையும் வகையில், அவ்வப்போது மானிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில், ‘பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம்’ (சூர்யகர் முப்தி பிஜிலி யோஜனா) என்ற திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரிசக்தி மின்இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதால், தனியாரிடம் இருந்து நிலக்கரி மற்றும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான செலவு, மின்வாரியத்துக்கு கணிசமாக மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2.40 கோடி வீடுகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்கிறது. தினசரி மின்தேவையை பூர்த்தி செய்ய, மின்வாரியம் தனது சொந்த மின்உற்பத்தியை தவிர, மத்திய மின்உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் செலவு அதிகரிக்கிறது. இதனால், மின்தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகளை மின்வாரியம் ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில், வீடுகளில் மானியத்துடன் கூடிய மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில், 1 கிலோவாட் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ரூ.50 ஆயிரம், 2 கிலோவாட் அமைக்க ரூ.1 லட்சம், 3 கிலோவாட் அமைக்க ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். அதற்கு முறையே, ரூ.30 ஆயிரம், ரூ.60 ஆயிரம், ரூ.78 ஆயிரம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்கும் பணி முடிந்த 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது.

1 கிலோவாட் திறன் உடைய சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து தினமும் 4-5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,125 கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வீட்டில் 1 கிலோவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையம் அமைத்தால் 2 மாதங்களுக்கு 240 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். அந்த வீட்டுக்கான 400 யூனிட் பயன்பாட்டில், சூரியசக்தி மூலமாக 240 யூனிட் கிடைக்கும். எஞ்சிய 160 யூனிட்டில் முதல் 100 யூனிட் இலவச மின்சார வரம்புக்குள் வந்துவிடும். மீதியுள்ள 60 யூனிட்டுக்கு நெட்வொர்க் கட்டணத்துடன் சேர்த்து மின்கட்டணம் ரூ.206 மட்டுமே வரும். மின்கட்டணம் ரூ.1,125-க்கு பதிலாக ரூ.206 மட்டுமே செலுத்தினால் போதும் என்பதால், மின்கட்டண செலவு ரூ.919 மிச்சமாகும்.

மேலும், இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில் சொந்த பயன்பாட்டுக்கு போக எஞ்சியுள்ள மின்சாரத்தை மின்வாரியத்தின் கிரிட்டுக்கு விற்பனை செய்யலாம். மின்நிலையம் அமைக்கும்போதே, இதற்கான வசதியும் செய்து தரப்படும்.

தற்போது மின்வாரியம் சார்பில் அனல், நீர், எரிவாயு மூலம் 7,157 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் கோடி செலவாகிறது. இந்த சூழலில், சூரியசக்தி மேற்கூரை மின்நிலையம் அமைப்பதன் மூலம் மின்வாரியத்துக்கு 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு செலவு குறையும்.

இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 12 மின்வாரிய மண்டலங்களில் உள்ள 2,837 பிரிவு அலுவலகங்கள் மூலம் தலா ஓர் அலுவலகத்துக்கு 1,000 இணைப்புகள் வீதம் சூரியசக்தி மின்இணைப்பு வழங்கப்படும். இதுதொடர்பாக தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

4 hours ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

13 mins ago

வணிகம்

16 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

44 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

51 mins ago

வணிகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்