காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து

By நெல்லை ஜெனா

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கான காவிரி நீர் 14.75 டிஎம்சி குறைந்துள்ளது. இந்த உத்தரவு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீர் மேலாண்மை, பாசன செயல்திட்டம் குறித்து, 'தி இந்து' தமிழ் சார்பில், இதுகுறித்து எம்ஐடிஎஸ் எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ்) பேராசிரியரும், விவசாய பொருளாதாரம் மற்றும் நீரியல் நிர்வாகத்துறை வல்லுநருமான சிவசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவர் அளித்த விரிவான பதில்:

''காவிரியைப் பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளை ஒப்பிட்டால் கர்நாடகாவில் விவசாய பாசன பரப்பளவு பல லட்சம் ஏக்கர்கள் அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் பாசன பரப்பளவு குறைந்துள்ளது. இதற்கு பலவித காரணங்கள் இருந்தாலும், நாம் பயன்படுத்தும் நீர் மேலாண்மையும் மிக முக்கியமானது. தமிழகத்தைப் பொருத்தவரை விவசாயத்தை, நீர் மேலாண்மையையும் சரிவர பயன்படுத்தாமல் இருப்பது நீண்டகால குறையாகவே உள்ளது.

விவசாயிகளுக்கு...

காவிரி டெல்டா விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக மாறுபட்ட பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். தண்ணீர் குறைவாக தேவைப்படும் எள், கடலை மற்ற பருப்பு வகைளை பயிர் செய்யலாம். இவற்றை நாம் பெரிய அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இதற்கு உள்நாட்டில் நல்ல தேவையும் உள்ளது. விலையும் கிடைக்கிறது.

இதுபோலவே பாசனத்தில் புதிய தொழில்நுட்பங்கள் தற்பாது பயன்படுத்தப்படுகின்றன. நீர் மேலாண்மை மிகவும் முக்கியம். குறைந்த தண்ணீரை வைத்து சாகுபடி செய்வது அவசியமான ஒன்று. காவிரி டெல்டா அல்லாமல் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் விவசாயிகள் புதிய நீர் மேலாண்மைக்கு அதிகம் மாறி வருகின்றனர். எனவே டெல்டா விவசாயிகளும் புதிய நீர் மேலாண்மைக்கு வேகமாக மாற வேண்டும்.

குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கிணற்றுப் பாசனங்களில் கூட சொட்டு நீர் பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்கின்றனர். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க முடிகிறது. இதுபோன்ற தொழில்நுட்ப முறையை கடை பிடிக்கலாம்.

மத்திய, மாநில அரசுகளுக்கு...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படி காவிரி நீர் பகிர்வை கவனிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுபடி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, நீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். போதுமான அளவு பருவமழை பெய்யும் காலங்களில் கர்நாடகா - தமிழ்நாடு இரு மாநிலங்களிலுமே பிரச்சினை இல்லை.

அதேசமயம் 75% அளவிற்கு மட்டுமே மழை பெய்தால் அதற்கு ஏற்றவாறு சாகுபடியை மாற்ற வேண்டும். பருவமழை அளவு 50 சதவீதம் குறைந்தால் இரண்டு போகத்திற்கு இரண்டு மாநிலங்களும் தலா ஒரு போக சாகுபடியை செய்யலாம். ஜூன் மாதத்தில் கர்நாடகாவும், அதற்கு அடுத்த போகத்தை தமிழகமும் செயயலாம். இரு மாநிலங்களும் அதிகமான சாகுபடி செய்து தண்ணீர் பற்றாக்குறையில் சிக்காமல் இருக்க மேலாண்மை வாரியம் சரியான நீர் மேலாண்மையை பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசுக்கு...

தமிழகத்தில் பொதுவாக தண்ணீருக்கான தேவை அதிகரித்து வரும்போது, நீர் சேமிப்பு என்பதில் தமிழக அரசு மிக கவனமாக இருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு, வீடுகளில் செயல்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்பின் மூலம் ஒரளவு தண்ணீர் சேமிப்பு நடைபற்றது. ஒட்டுமொத்தமாக நமது தண்ணீர் தேவையை ஒப்பில்ட்டால் இது, 0.001 சதவீத அளவு தான். அதுவே நமக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதற்கு பதில் ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரினால், கூடுதலாக 40 சதவீத அளவிற்கு தண்ணீரை சேகரிக்க முடியும்.

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதை முதன்மையான திட்டமாக கொண்டு அரசு செயல்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சமீபத்தில் தடுப்பணை கட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தடுப்பணையைத் தாண்டிப் பாயும் அளவிற்கு அங்கு நீர் நிரம்பியுள்ளது.

தமிழகத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே எந்த தடுப்பணையும் கட்டப்பட வில்லை. இதனால் தண்ணீர் வரும் காலத்தில் அது வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுபோலவே காவரியின் குறுக்கேயும் தடுப்பணை கட்டுவதால் அந்த நதியின் பாசனப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக அதிகரிக்கும். ஆற்றின் குறுக்கே 8 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தடுப்பணை வீதம் கட்டலாம்.

உலக வங்கியின் அறிவுறுத்தல்படி, தண்ணீர் பயன்படுத்துவோர் அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் எந்தவித வழிகாட்டுதலும் இன்றி பெயரளவிற்கு இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் மூலம் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

வழிகாட்டும் செம்பரம்பாக்கம்

சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக அரசு தூர்வாரியுள்ளது. இதன் மூலம் 3.1 ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட அந்த ஏரி தற்போது, 3.5 டிஎம்சி கொள்ளவிற்கு தண்ணீர் சேகரிக்ககூடிய அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவை என்பதால் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து இதனை உரிய முறையில் தூர்வாரி உள்ளது.

இதுபோலவே தமிழத்தில் உள்ள 41 ஆயிரம் ஏரிகளையும் தூர் வாரினால் எந்த அளவிற்கு தண்ணீர் சேமிக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும். இதுபோலவே குளங்களும், தண்ணீர் செல்லும் கால்வாய்களையும் தூர்வாரினால் தண்ணீர் சேமிப்பு என்பது பல மடங்கு பெருகும்.

இதுபோன்ற நீர்மேலாண்மையும், நீர் ஆதாரங்களை பாதுகாப்பதும் மிகவும் அவசியம். உரிய காலத்தில் இதனை செய்ய தவறினால் எதிர்காலத்தில் மிக நெருக்கடியை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். கால தாமதம் ஆனாலும், இப்போதாவது, தமிழகம் நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.''

இவ்வாறு பேராசிரியர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்