கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி: பிப்.28-க்குள் நாடு திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நிபந்தனை

By செய்திப்பிரிவு

பயணத் திட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கவேண்டும். வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2007-ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக,வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறி, அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 28 ஆகிய நாட்களில் 2 ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்களை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.துரைசாமி இந்த வழக்கை விசாரித்து, லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே, டென்னிஸ் போட்டி தொடர்பாக பிப்ரவரி, மார்ச்சில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:

பிப்ரவரி 15 முதல் 28 வரையும், மார்ச் 20 முதல் 31 வரையும் வெளிநாடு செல்ல மனுதாரர் அனுமதி கோரியுள்ளார். இதில், பிப்ரவரியில் மட்டும் அவர் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. எந்த நாட்டுக்கு, எந்த தேதியில் செல்கிறார்? எப்போது திரும்பி வருவார்? என்பது உள்ளிட்ட பயணத் திட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

தனது வங்கிக் கணக்குகளை தொடர்ந்து பயன்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அந்த கணக்குகளை மூடக்கூடாது. மேலும், வெளிநாடு சென்றுவிட்டு, வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.

லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த வழக்கு மார்ச் 12-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அந்த மாதத்தில் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவது குறித்து இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

10 mins ago

ஆன்மிகம்

20 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்