அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் 1058 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில்  தமிழக அரசு பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை நேரடி யாகத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்து 33,567 பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியானது.

அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியானது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியியல் அல்லாத பாடப்பிரிவினருக்கு (ஆங்கிலம், கணிதம், இயற்பியல் வேதியியல்) நவம்பர் இறுதி வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பொறியியல் பாடப்பிரிவினருக்கு (சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் போன்றவை) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில், விரிவுரையாளர் தேர்வு முடிவை டிசம்பர் மாதம் 11-ம் தேதி திடீரென ஆசிரியர் தேர்வு வாரியம் வாபஸ் பெற்றது. பின்னர் தேர்வர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களை (ஓஎம்ஆர் ஷீட் நகல்) இணையதளத்தில் வெளியிட்டது.

இதனிடையே முதலில் வெளியான தேர்வு முடிவில் 130, 139, 146, 149 என அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்ற பலரின் மதிப்பெண் 45, 48, 54 என குறைந்ததும், 200 பேரின் மதிப்பெண்ணில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர். விசாரணை முடிந்து புதிதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்து பிப். 9-ல் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்த செய்யப்பட்டதை எதிர்த்து சிவகங்கையை சேர்ந்த இளமதி, உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் எம்எஸ்சி (கணிதம்) பிஎட் முடித்துள்ளேன். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக தேர்வு வாரியம் 16.9.2017-ல் நடத்திய எழுத்து தேர்வில் பங்கேற்றேன். இந்த தேர்வு முடிவுகள் 7.11.2017-ல் வெளியிடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. விரைவில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதிப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

எழுத்து தேர்வில் 133567 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 200 பேரின் தேர்வு தாள் மதிப்பீடு செய்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அந்த 200 பேரின் விடைத்தாளை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதற்காக மொத்த தேர்வையும் ரத்து செய்வது தவறு. எழுத்துத்தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மதிப்பீடு செய்வதில் தான் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அப்படியிருக்கும் போது முறைகேடு நடைபெற்ற விடைத்தாட்களை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தி பணி நியமன நடைமுறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சட்டவிரோதம்.

எனவே அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் 9.2.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்துத்தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்னை அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளராக நியமிக்கவும், அதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப். 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 min ago

இந்தியா

4 mins ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

17 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்