சென்னை: "நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையைத்தான், "இண்டியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.
தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.
கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் ’சிப்’பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.
இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை.
‘இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே,நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம், என ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago