Published : 18 Feb 2024 02:09 PM
Last Updated : 18 Feb 2024 02:09 PM
சீர்காழி: "அதிமுக பாஜகவில் இருந்து விலகிய உடனே, திமுக அரசு கிறிஸ்தவர்களை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிகிறது. 3 ஆண்டுகாலமாக கிறிஸ்தவ மக்கள் திமுகவின் கண்ணுக்குத் தெரியவில்லை. நாங்கள் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்துப் பேசுகிறார். அவர்களுடைய கோரிக்கையைக் கேட்கிறார். அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது"என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றாவது, திமுக ஆட்சியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? . திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்திவிட்டனர்.
மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகும் என்பதே தெரியவில்லை. அப்படியான நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்த அதிமுக அரசு. அப்போது அவர்களுடைய வயலுக்கு போதுமான தண்ணீர் விளைச்சலுக்குக் கிடைக்கும். அந்த திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. ஆதனூர் குமாரமங்கலம் இடையே தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கையை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசாங்கம். இப்படி ஏராளமான திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அத்துடன் அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
அதிமுக பாஜகவில் இருந்து விலகிய உடனே, திமுக அரசு கிறிஸ்தவர்களை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். 3 ஆண்டுகாலமாக கிறிஸ்தவ மக்கள் திமுகவின் கண்ணுக்குத் தெரியவில்லை. நாங்கள் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்துப் பேசுகிறார். அவர்களுடைய கோரிக்கையைக் கேட்கிறார். அதிமுகதான் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. நேற்றுகூட இஸ்லாமிய மக்களின் முக்கியத் தலைவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். 3 வருடங்களாக இஸ்லாமியர்களை திமுக கண்டு கொள்ளவே இல்லை. இப்போதுதான், இஸ்லாமியர்களின் கஷ்டங்களை புரிந்துகொள்வதற்கான காலம் முதல்வருக்கு வந்திருக்கிறது.
இதெல்லாம் வருவதற்கு யார் காரணம்? அதிமுக கேள்வி எழுப்பியதால் வந்ததுள்ளது. இல்லையென்றால், சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத அரசுதான் இந்த திமுக அரசு. ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான். 5400 மெட்ரிக் டன் அரிசியை அதிமுக அரசு கொடுத்தது. நாகூர் தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவுக்காக விலையில்லா சந்தனக் கட்டைகளை வழங்கியது அதிமுக அரசுதான்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT