ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சசிகலாவுக்கு எதிரான ஆவணங்கள் வழக்கறிஞரிடம் ஒப்படைப்பு - பிரமாண பத்திரம் பிப்.26-ல் தாக்கல் என தகவல்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது புகார் தெரிவித்தவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை அவரது வழக்கறிஞரிடம் விசாரணை ஆணையம் ஒப்படைத்தது. இவற்றை ஆய்வு செய்த பிறகு, சசிகலா தரப்பில் வரும் 26-ல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், கடந்த ஆண்டு டிசம்பர் 21- ம் தேதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது. அதில், ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தது. இந்த நிலையில், ஆணையத்தில் தனக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள் பற்றிய விவரங்களை தருமாறும், அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டும் ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளில் சசிகலா தரப்பில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய 22 பேரின் விவரங்களை ஆணையம் அவருக்கு அனுப்பியது. குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தது.

சசிகலா தரப்பு தன்னிடம் உள்ள ஆதாரங்களை இன்னும் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு ஆணையம் ஜனவரி 30-ம் தேதி உத்தரவிட்டது. அந்த கெடு முடியும் நிலையில், சசிகலா தரப்பில் கடந்த 6-ம் தேதி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘குறுக்கு விசாரணைக்காக வழங்கப்பட்டுள்ள அவகாசம் போதாது. புகார் கொடுக்கும் அனைவரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி முடித்த பிறகு, இறுதியாக நாங்கள் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். எனக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களின் பெயர், அவர்களது வாக்குமூலம், அவர்கள் அளித்த ஆவணங்கள் போன்ற விவரங்களையும் தரவேண்டும். அதன் பிறகு 10 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆணையத்தில், இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு, சசிகலா கேட்ட தகவல்களை வழங்க ஆணையம் முடிவு செய்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:

சசிகலாவுக்கு எதிராக 22 பேர் சுமார் 450 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் 16 ஆவணங்களை விசாரணை ஆணையம் என்னிடம் கொடுத்துள்ளது. மற்ற ஆவணங்களை ஓரிரு நாளில் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு, சசிகலா தரப்பில் வரும் 26-ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பாக நான் கொடுத்த பென்-டிரைவ் வீடியோ காட்சி 47 விநாடிகள் ஓடுவதாக ஆணைய அதிகாரிகள் கூறினர். எனவே, அந்த காட்சியை நீதிபதி பார்த்திருப்பார் என்று நம்புகிறேன்.

பெங்களூரு சிறையில் ஜனவரி 30, பிப்ரவரி 9 ஆகிய நாட்களில் சசிகலாவை சந்தித்து பேசினேன். சிறையில் கட்சிக்காரரை வழக்கறிஞர் 45 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடியும். எனவே, நடைமுறை சிக்கல்களையும் ஆணையத்திடம் கூறியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஜராகாத ஜெ. கார் ஓட்டுநர்

ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகள் கார் ஓட்டுநராக இருந்தவர் ஐயப்பன். அவரை பிப்ரவரி 12-ம் தேதி (நேற்று) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘ஐயப்பனுக்கு உடல்நிலை சரியில்லை. வேறொரு நாள் ஆஜராவார்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்