அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு, ‘பாரதம் @ 2047’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் இன்று இரவு கலந்துரையாடி பேசியதாவது:
“இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார மிக்க நாடாக வளர்ந்துவிடும். பிரதமரின் வலிமையான வழிகாட்டுதலில் அனைத்து துறைகளிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்களை கொண்டது இந்தியா, உலகத்துக்கு வழிகாட்டக்கூடிய வகையில் வளர்ந்து வருகிறது.
குறிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை விட 4 மடங்கு அதிகமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்கிறோம். 100 மில்லியன் கேஸ் இணைப்பு, 500 மில்லியன் வங்கி கணக்கு துவக்கம் போன்றவற்றை இந்த பத்தாண்டுகளில் நாம் செய்துள்ளோம்.
110 மில்லியன் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 முறை நிதி உதவி கொடுக்கிறோம். அரசியலில் வாரிசு, ஊழல் என ஒரு தலை பட்சமாக சிக்கியிருந்தோம். வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயல்படுகிறது. உலக அளவில் முக்கியத்துவம் மிக்க நாடாக திகழ்கிறோம். இப்போது உலக நாடுகள் நம்மிடம் உதவி கேட்கிறார்கள். அனைத்தும் சமம் என்கிற கொள்கையில் தற்போது செயல்படுகிறோம். கடந்த காலங்களில் சட்டத்துக்கு மேல் என இருந்தனர். தற்போது அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்கிற நிலைக்கு வந்துள்ளோம்.
சமத்துவம் இல்லாமல் சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியாது. குடியரசு தினவிழாவில் பெண்கள் சக்தியை பறைசாற்றும் வகையில் நடந்த நிகழ்ச்சி உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஆட்சியில் பெண்களின் பங்களிப்பு இருக்கும். 3-ல் ஒரு பங்கு பெண்கள் பங்களிப்பு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் இருக்கும். இன்று இந்தியா தளவாட பொருட்கள் உள்ளிட்ட முக்கிய சாதனங்களை நாமே தயாரிக்கிறோம். 4-வது நாடாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளோம். இன்னும் பல சாதனைகளை படைக்க இருக்கிறோம். மற்ற நாடுகள் நம்மை பார்த்து வியக்கிறார்கள், மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள். 2047-ம் ஆண்டில் இந்தியா சிறப்பான நிலையில் இருக்கும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதே நேரத்தில் அரசியல் எளிதானது அல்ல. கடுமையான முயற்சிகள் எடுத்துத்தான் வர வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு கடுமையான உழைப்பு இருக்க வேண்டும். நம்முடைய ஜனநாயக அமைப்பானது, ஊராட்சி, நகராட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என பல கட்டங்களாக உள்ளது. நிர்வாக முறை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் இளைஞர் பங்களிப்பு அவசியம், இதனைதான் பிரதமரும் விரும்புகிறார். அரசியல் அதிகாரத்தில் பெண்கள் பங்களிப்பை ஒப்பிடும்போது, 1990-களில் 17 எம்.பி-க்கள் எண்ணிக்கை தற்போது பல மடங்கு கூடியுள்ளது. இது பாலின சமத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதற்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. அனைத்து நிலைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராஜ்நிவாஸில் இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் விடுதியில் இரவு தங்கினார். நாளை காலை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சிதம்பரம் புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சிக்கு அழைத்தும் பல்கலைக்கழக விழா அரங்கில் அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்த செய்தியாளர்கள்: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையொட்டி அச்செய்தியை சேகரிக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு காவல் துறை மூலம் நுழைவு அனுமதி சீட்டு தரப்பட்டது.
பஸ் பல்கலைக்கழகம் சென்றவுடன் விழா அரங்கு முன் வழியாக பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின் வழியாக செல்ல தெரிவித்தனர். அங்கு சென்றபோது,
குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்வுக்கு செய்தியாளர்கள், புகைப்படகாரர்கள், வீடியோகிராபர்கள் ஆகியோருக்கு அழைப்பு கொடுத்தும் அரங்கத்திற்குள் அனுமதியில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து செய்தியாளர்கள் உயர்மட்டம் வரை பேசியும் உள்ளே அனுமதிக்கவில்லை. விழா அரங்குக்கு அடுத்துள்ள கட்டிடத்தில் பத்திரிக்கையாளர் அமர அறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபோல் ஏதும் வசதி செய்து தரப்படவில்லை. இறுதியில் 10 பேரை மட்டும் அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்காமல் ஒட்டுமொத்த செய்தியாளர்களும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார்கள்.