அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி - விழாகோலம் பூண்ட மதுரை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் நாளை 15-ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் காரணமாக, மதுரையே திருவிழா கோலாம் பூண்டுள்ளது.

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் திரளும் வெளிநாட்டு, உள்நாட்டு பார்வையாளர்களால் மதுரை மாவட்டமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் மொத்தம் 6 ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் ‘டோக்கன்’ வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக ஆண்டு முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பிரத்யேகமாக காளைகளை வளர்ப்பார்கள். விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகளை எளிதாக வளர்த்துவிடலாம்.

ஆனால், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பராமரிப்பும், தீனியும் ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவை. குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு இந்த காளைகளுக்கு ரூ.300 முதல் ரூ.1,000 வரை செலவாகும். ஆனாலும், பெரிய பொருளாதார பின்னணியும், வருவாயும் இல்லாவிட்டாலும் கூட, மதுரை கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் வீட்டில் ஒரு குழந்தையை போல் வளர்ப்பார்கள். இந்த காளைகளை விவசாயம் உள்ளிட்ட மற்ற எந்த பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் நாளை 15-ம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காளைகளும், 4,514 வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். இந்த காளைகளை கால்நடை துறை மருத்துவர்கள் மருத்துவப்பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதிச்சான்று வழங்கியிருந்தனர்.

அந்த சான்றுகளுடன்தான் காளைகளை போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசோதனை செய்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க தலா 1,000 காளைகள் என்ற விகிதத்தில் மொத்தம் 6 ஆயிரம் காளைகளுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர். அந்த வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் நாளை களம் இறங்குகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாநகரகாவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில், 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் மூன்று எஸ்பிக்கள் பிரவீன் உமேஷ்(மதுரை), சிவபிரசாத்(தேனி), தங்கத்துரை(ராமநாதபுரம்) மற்றும் டிஐஜி ரம்யா பாரதி ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு, ஆம்புலன்ஸ்கள், தற்காலிக அவசர சிகிச்சை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், நடமாடும் கழிப்பிட அறைகள் மற்றும் தற்காலி கழிப்பிட அறைகள் போன்றவை, இந்த மூன்று ஜல்கட்டு போட்டிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பில் தலா ஒரு கார் என்ற அடிப்படையில் மொத்தம் 6 கார்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டாம் பரிசாக கார், கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு, தங்ககாசு, பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக் ஷி, சைக்கிள், பட்டு சேலை உள்பட பல வகை பிரமாண்ட பரிசுகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஒவ்வொரு காளைக்கும் நிச்சயப்பரிசும் வழங்கப்படுகிறது. அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் லி.மதுபாலன் மற்றும் போலீஸார் இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

குலுக்கல் முறையில் காளைகளுக்கு டோக்கன்: அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எப்பேதுமே 600 முதல் 700 காகைள்தான் அவிழ்க்கப்படும். இந்த முறை ஆயிரம் காளைகளை அவிழ்க்க திட்டமிட்டுளோம். அதற்காகவே பிரத்யேக பக்கவாட்டில் தள்ளும் (sliding door) வாடிவாசல் கதவு செய்து புதிய முறையில் வைத்துள்ளோம். வாடிவாசல் முன்பு அகலமாக இருக்கும். அதனால், மாடுகள் சுற்றி திரும்பி செல்லும். அதில் காளைகளைஅவிழ்க்க தாமதமாகும். தற்போது பொருத்தப்பட்டுள்ள வாடிவாசல் கதவு மாடு வருவதற்கான அளவிலே உள்ளது. இதனால், மாடுகள் வேகமாக அவிழ்த்துவிடப்படும். அவனியாபுரத்தில் 1,000 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்