விஜயகாந்தின் அரசியலை முற்றிலும் முடக்கிய சிறுநீரக பிரச்சினை: அமெரிக்காவில் சிகிச்சை பெற்றும் பலனில்லை

By சி.கண்ணன்

சென்னை: விஜயகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பிரச்சினை, அவரது அரசியலை முற்றிலும் முடக்கியது.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் உச்சத்தில் இருந்தபோது தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, முதல்முறையாக எம்எல்ஏவானார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.

அரசியலில் வளர்ந்து வந்த விஜயகாந்த், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினையால் எல்லாம் தலைகீழாக மாறியது.

2014-ல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருந்த நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். உடல்நலக் குறைவால், அவரது அரசியல் செயல்பாடுகள் படிப்படியாக குறையத் தொடங்கின.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா, சிங்கப்பூருக்கு சென்றார். 2019-ல் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், வீட்டிலேயே ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

2020 அக்டோபர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், அவ்வப்போது பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்தார்.

இதற்கிடையில் அவருக்கு தைராய்டு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கின. இதனால் சரியாக நடக்க முடியாமலும், பேச முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். 2022 ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவுப் பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது. பின்னர் விஜயகாந்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கத் தொடங்கின. அதேநேரத்தில், தேமுதிகவும் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.

மாதம் ஓரிரு முறை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக விஜயகாந்தை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்துவந்தார். விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் இருக்கும் படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வந்தன.

வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த நவ. 18-ம்தேதி சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த நிலையில், கடந்த 11-ம் தேதி வீடு திரும்பினார். கடந்த 26-ம் தேதி இரவு விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை 6.10 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்