போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு விதித்த தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: பணிநீக்கம் செய்யக் கூடாது என்றும் நிபந்தனை

By செய்திப்பிரிவு

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த தொழிலாளரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 4-ம் தேதி மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, இந்த மனுவை கடந்த 5-ம் தேதி விசாரித்து, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தது.

அதன் பிறகும் போராட்டம் தொடர்ந்ததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் வாராகி சார்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, தங்கள் கருத்துகளை தெரிவித்து, சில கேள்விகளை எழுப்பினர். தொழிற்சங்கங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரகாஷ், என்ஜிஆர்.பிரசாத்,சி.கே.சந்திரசேகர், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நடந்த வாதம்:

நீதிபதிகள்: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தால் பாதிக்கப்படுவது சொகுசு காரில் செல்லும் அமைச்சர்களோ, நீங்களோ, நாங்களோ கிடையாது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர்தான். இப்போராட்டத்தால் சாமானிய மக்களும், மாணவர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

தொழிற்சங்கங்கள் தரப்பு வழக்கறிஞர்கள்: தமிழக அரசின் அலட்சியப்போக்கால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) பிடித்தம் செய்த ரூ.2,600 கோடியை தமிழக அரசு கடந்த 7 ஆண்டுகளாக பி.எஃப். அலுவலகத்துக்கே செலுத்தவில்லை. மேலும், வழங்கப்பட வேண்டிய பணப் பலன்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் உள்ளது. ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பணப் பலனையும் வழங்கவில்லை. இதனால், பல தொழிலாளர்கள் வறுமையில் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். உயர் நீதிமன்றமே தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும், இதுவரை நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது.

அரசு தலைமை வழக்கறிஞர் பலமுறை உத்தரவாதம் அளித்துவிட்டார். போக்குவரத்து துறை செயலாளரும் நேரில் ஆஜராகி உறுதியளித்தார். இன்னமும் தொழிலாளர்களின் பணம், அவர்களைச் சென்றடையவில்லை. தொழிலாளர்கள் கோரும் ஊதிய உயர்வுக்கும், அரசு தர சம்மதிக்கும் ஊதிய உயர்வுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அரசுதான் வீம்பு செய்கிறது. இப்போராட்டம் தொடர்பாக செப்டம்பர் மாதமே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டத்துக்கான தடையை நீக்க வேண்டும்.

நீதிபதிகள்: தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை அரசால் வழங்க முடியவில்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டியதுதானே? தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது?

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்: எதிர்க்கட்சியான திமுக இந்த போராட்டத்தை பின்னால் இருந்து தூண்டி விடுகிறது. ரூ.1,138 கோடிக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ரூ.175 கோடி வழங்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உரிய அவகாசம் தேவை.

இவ்வாறு வாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது

இந்த விவகாரத்தை நடுநிலைமையுடன் பரிசீலிக்கிறோம். ஆம்புலன்ஸ், செவிலியர்கள், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய பணிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அதே நேரம் இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டையும் ஏற்க முடியாது.

எந்தப் போராட்டமும் முன்னறிவிப்பின்றி நடக்கக் கூடாது என்பதால்தான் தடை விதித்தோம். அந்த தடை உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதே நேரம், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப். உள்ளிட்ட எல்லா பணப் பலன்களை யும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு ஏற்கெனவே விசாரித்து வருவதால், இந்த வழக்கையும் அந்த அமர்வுக்கே மாற்றுகிறோம். போராட்டத்துக்கு நாங்கள் விதித்த தடையை நீக்க முடியாது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல், எந்த தொழிலாளரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

11 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

17 mins ago

ஆன்மிகம்

27 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்