பொங்கல் முன்பதிவு ரத்து; போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு பேச வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை சாதகமான முறையில் நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் இன்று ஆறாவது நாளாக நீடித்து வரும் நிலையில், வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் பொங்கல் திருநாளுக்கான சிறப்புப் பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படுமா? என்ற அச்சமும், கவலையும் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வசதியாக ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதற்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று காலை நடைபெறுவதாக இருந்த முன்பதிவு தொடக்க நிகழ்ச்சி எந்தக் காரணமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் மக்களிடையே தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையில், பொங்கல் திருநாளுக்கு 10 விழுக்காடு கூட சிறப்புப் பேருந்துகளை இயக்க முடியாது. ஆனால், வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றவில்லை. ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள், இன்று பல்வேறு இடங்களில் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருப்பதால், அரசுத் தரப்பிலிருந்து முன்முயற்சி செய்யப்பட்டால் மட்டுமே போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேருந்துகளை இயக்க முடியும்.

ஆனால், தமிழக அரசோ இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்த வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் இனி பேச்சு நடத்த வாய்ப்பே இல்லை என்றும், தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் இன்று போராட்டம் நடத்திய அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர இத்தகைய நடவடிக்கைகள் எந்த வகையிலும் உதவாது. மாறாக, போராட்டம் மேலும் தீவிரமடைவதற்கே வழி வகுக்கும். இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இப்போது வழங்கப்படும் அடிப்படை ஊதியத்தை 2.57 மடங்காக பெருக்கி வழங்க வேண்டும் என்பது தான் தொழிற்சங்கங்களின் கோரிக்கை. தமிழக அரசுத் தரப்பில் 2.44 மடங்கு ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் பேச்சு நடத்தினால் இரண்டுக்கும் பொதுவாக ஓர் அளவை நிர்ணயித்து உடன்பாடு எட்டப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தொழிலாளர்களுடன் பேச முடியாது என அரசு கூறுவது அராஜகம் ஆகும்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உடனடியாக திரும்பப் பெறப்படாவிட்டால் பொங்கல் திருநாளுக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, போக்குவரத்தை நம்பியிருக்கும் தொழில்களும் கூட பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் தொழிற்சங்கங்களுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை சாதகமான முறையில் நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்