குறைந்தளவு பேருந்துகளே சென்னையில் இயக்கம்

By செய்திப்பிரிவு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்வதால், சென்னையில் நேற்றும் குறைந்த மாநகர பஸ்களே இயக்கப்பட்டன. இதனால், பல்வேறு பணியின் காரணமாக செல்வோர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒரு சில தொழிலாளர்கள் நேற்று பணிக்குத் திரும்பியுள்ளனர். இதனால், சுமார் 40 முதல் 45 சதவீத மாநகர பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

சென்னையில் நேற்று மத்திய பணிமனை, வடபழனி, தியாகராய நகர், அண்ணா நகர், அடையார், சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி, குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர், அயனாவரம், எண்ணூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் 55 சதவீத மாநகர பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில பணிமனைகளில் ஓட்டுநர்கள் பஸ்களை ஓட்டிச் சென்று, ஓரிரு சிங்கள் ஓட்டி பிறகு மீண்டும் பணிமனைகளிலேயே நிறுத்திவிட்டுச் சென்றனர்.

நடத்துநராக மாறிய அலுவலர்கள்

போக்குவரத்து அலுவலக உதவியாளர், பணிமனையில் பணியாற்றுவோர் அவரவர்களின் பணியை விட்டுவிட்டு மாற்று உடையில் நடத்துநராகப் பணியாற்றினர். வெளியூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் பயணிகளிடம் வழித்தடம் கேட்டறிந்து பஸ்களை இயக்கினர்.

திங்கள்கிழமை அலுவலக தினம் என்பதால் கடந்த 2 நாட்களுக்கு பிறகு முக்கிய சாலைகளில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. போதிய பஸ்கள் இல்லாதபோதிலும் மின்சார ரயில்களிலும், பறக்கும் ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் தொடர்ந்து நேற்று கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. ஆட்டோ, ஷேர்ஆட்டோ போன்ற இதர வாடகை வாகனங்களில் சுமார் 30 சதவீதம் வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

போலீஸாருடன் வாக்குவாதம்

அயனாவரத்தில் இருந்து எழும்பூர் வழியாக பெசன்ட்நகர் நோக்கி மாநகர பஸ் (23சி) நேற்று சென்றுக் கொண்டிருந்தது. புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அந்த பஸ் சென்றபோது, அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் படியில் நின்றுக் கொண்டிருந்தவர்களை உள்ளே போ.. போ.. என தள்ளிவிட்டு சாலை விதியை கடைப்பிடிக்க வேண்டுமென நோட்டீஸ்களை வழங்கினர். இது சாலை பாதுகாப்பு வாரம் என போலீஸார் கூறினர். பஸ்சே வரல… கூட்ட நெரிசலில் எங்கே செல்வது என போக்குவரத்து போலீஸாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘பஸ்களில் பயணம் செய்யும்போது அன்றாட பயண செலவு குறைவாக இருந்தது. ஆனால், தற்போது பஸ்கள் ஓடாததால், ஆட்டோ, கால்டாக்ஸிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், அன்றாட பயணம் செலவு ரூ.70 முதல் ரூ.100 ஆக அதிகரித்து விட்டது. எனவே, பஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகம் தீர்வுகாண வேண்டும்’’ என்றனர்.

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்த்துள்ளதால், கோயம்பேடு உள்ளிட்ட இடங்கள், மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இருப்பினும், மக்களின் தேவைக்கு ஏற்ப கணிசமான அளவுக்கு விரைவு பஸ்களை இயக்கினோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

உலகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்