கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை காலம் சக்கையாக துப்பிவிடுகிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்தையும் சுவடுகளற்ற பயணமாகவும் காலம் மாற்றி விடுகிறது. ஆனால், பிறருக்காக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகளை காலம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கிறது. அத்தகைய மகத்தான மனிதர்கள் இந்த உலகை விட்டு மறைந்து விடலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனித குலத்திற்கு ஆற்றிய பங்களிப்பை காலம் பத்திரமாக போற்றி பாதுகாக்கிறது.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையையும் அப்படித்தான் காலம் போற்றி பாதுகாக்கிறது. சங்க காலத்தில் பேகன் தோகை விரித்த மயிலுக்கும், பாரி துவண்டு விழுந்த கொடி மலருக்கு மனம் இறங்கியதைப் போல, பிற்காலத்தில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல, இதயத்தின் வழியே சுரக்கும் ஈரம் தான் மனித நேயத்தின் வாசல் என்ற ஈகையின் மகத்துவத்தை கடைபிடித்தவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப் படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர், "எனது இதயக் கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

1967ம் ஆண்டு தமிழகத்துல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். "தம்பி நீ முகத்தைக் காட்டினால் போதும், முப்பது லட்சம் ஓட்டு வரும்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே எம்.ஜி.ஆரை பார்த்துக் கூறியதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவருடைய கொள்கைகளை நிலை நாட்டுவதற்காக, அதிமுக என்னும் கட்சியைத் தொடங்கி, தமிழகத்துன் முதல்வராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் அவர் வாழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த அளப்பரிய சாதனைகள்தான்.

இப்படிப்பட்ட மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24ம் தேதி இந்த நாள், தமிழக மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

52 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்