சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தமாக கட்டிடம் இல்லை: விரைவில் கட்டி முடிக்க ஆவடி மக்கள் கோரிக்கை

By ப.முரளிதரன்

சென்னை: ஆவடியில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டிடப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தள்ளது. சென்னையை அடுத்த ஆவடி கடந்த 2019ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த மாநகராட்சியில் சுமார் நான்கரை லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சியை சுற்றியுள்ள திருநின்றவூர் நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூந்தமல்லி நகராட்சியைச் சேர்ந்த 33 வருவாய் கிராமங்களில் மொத்தம் 10 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சொந்தமாக நிலங்கள் வாங்கவும், விற்கவும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு வசதியாக ஆவடியில் கடந்த 1989ம் ஆண்டு டிச.31-ம் தேதியன்று சார் பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் நாள்தோறும் சராசரியா க 100 பத்திரப் பதிவுகள் நடைபெறுகின்றன. முகூர்த்த நாட்களில் 200 பத்திரப் பதிவுகள் வரை நடைபெறுகின்றன. இவ்வளவு பத்திரப் பதிவுகள் நடைபெறும் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தமாக கட்டிடம் கிடையாது. தற்போது, ஆவடி அடுத்த சேக்காடு அண்ணாநகர் பிரதான சாலையில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு பருத்திப்பட்டில் வருவாய் துறையால் சர்வே எண்.157 டவுன் சர்வே எண்.57/2-ல் 812 சதுர மீட்டர் களம் புறம்போக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில், 3,250 சதுர அடி பரப்பளவில் 2 அடுக்கு கொண்ட கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரை தளத்தில் பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அமரும் அறை, கணினி அறை, சார் பதிவாளர் அறை, ஆண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பறை கட்டப்படும். முதல் தளத்தில் ஆவண அறை, பொருட்களை இருப்பு வைப்பதற்கான அறை, உணவு அறை மற்றும் ஆண் ஊழியர்களுக்கான கழிப்பறை ஆகிய அமைக்கப்படும். இந்த சார் பதிவாளர் அலுவலகம் கட்ட கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், 2023-ல் இத்தொகை ரூ.1.68 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நிலம் ஒதுக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுமுன்தினம்தான் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.தரணிதரன் கூறியதாவது: வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. பத்திரப் பதிவு செய்யவரும் பொதுமக்கள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவை கிடையாது. இதனால், பொதுமக்கள் அலுவலகத்துக்கு வெளியே நிற்க வேண்டி உள்ளது. குறிப்பாக, மழைக் காலத்தில் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். அத்துடன், போதிய போக்குவரத்து வசதி கிடையாது. இரவு நேரத்தில் பாதுகாப்பு வசதி இல்லை. குடியிருப்பு பகுதியில் இந்த அலுவலகம் உள்ளதால் அங்கு வருவோரால் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், இடம் ஒதுக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்காததால் ஆண்டுதோறும் திட்ட மதிப்பீடு அதிகரித்து வருகிறது. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் கட்டிடப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் அரசு அனுமதி பெற்ற பத்திர எழுத்தாளர்கள் மற்றும் முத்திரைத் தாள் விற்பனையாளர்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். அத்துடன், சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 15 பணியிடங்களில் 9 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படமால் உள்ளன.

இதனால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறினார். இதுகுறித்து, பதிவாளர் அலுவலக தரப்பில் கேட்டபோது, சில அரசு நிர்வாக காரணங்களால் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், கட்டிடப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

29 mins ago

ஜோதிடம்

21 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

54 mins ago

கல்வி

27 mins ago

சுற்றுலா

6 hours ago

மேலும்