புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் சம்பள விவகாரம்: சட்டப்பேரவை உரிமை மீறல் குழு முன்பு அரசு சார்பு செயலர் கண்ணன் ஆஜர்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்த அரசு சார்பு செயலர் கண்ணன், சபாநாயகர் உத்தரவுக்கிணங்க சட்டப்பேரவை உரிமை மீறல் குழு முன்பு இன்று மாலை ஆஜரானார். அவருக்கு வரும் 9-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என உரிமை மீறல் குழு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது. முறையான அறிவிப்பு இல்லாததால் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யவில்லை. இதனால் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 3 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களுக்கு சம்பளம், கட்சி அலுவலகம், பேரவையில் இருக்கை வசதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் எனக் கோரி சபாநாயகரிடமும், சட்டப்பேரவை செயலரிடமும் மனு அளித்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக நியமன எம்எல்ஏக்களை நியமனம் செய்தது தவறு எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி புதுச்சேரி அரசின் சார்பு செயலர் கண்ணன், மத்திய அரசின் கடிதத்தை மேற்கோள் காட்டி மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் இதர சலுகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து அதற்கான நகலுடன் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயரை 3 நியமன எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் மீண்டும் சந்தித்து சம்பளம் உள்ளட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தினர். ஆனால் அதை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்ததோடு, சட்ட விதிகளை மீறி 3 பேரும் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டு இருப்பதால், சம்பளம் உள்ளிட்ட எந்த சலுகைகளும் தற்போது வழங்க முடியாது என்று சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் மூலம் சார்பு செயலர் கண்ணனுக்கு கடிதம் அனுப்பினார்.

இதனிடையே சார்பு செயலர் கண்ணனின் உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்த அரசு கொறடா அனந்தராமன் அவர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பினார். இதனை அடுத்து உரிமை மீறல் குழு, சார்பு செயலர் கண்ணனை ஜனவரி 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்டது. அதன்பேரில் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு தலைவர் சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், சிவா, பாஸ்கர், பாலன், சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்பு, அரசு சார்பு செயலர் கண்ணன் இன்று மாலை ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் துணை சபாநாயகர் சிவகொழுந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''3 நியமன எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவை செயலருக்கு சார்பு செயலர் கண்ணன் உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக அரசு கொறடா அனந்தராமன் உரிமை மீறல் குழுவிடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில் சார்பு செயலர் கண்ணனிடம் அது தொடர்பாக இப்போது விசாரணை நடத்தினோம். சில முரண்பாடான கருத்துக்கள் கடிதத்தில் உள்ளன. அது தொடர்பாக எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டோம். அவர் 9-ம் தேதி வரை நேரம் கேட்டார். இதையடுத்து 9-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

அவர் கொடுக்கும் விளக்கத்தை வைத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் 3 பேரும் எம்எல்ஏக்களா? என்பதே இன்னும் தெரியவில்லை. அதற்கு முன்பே சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது தொடர்பாகத்தான் விசாரணை நடைபெற்றுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

க்ரைம்

38 mins ago

வெற்றிக் கொடி

49 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்