ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்த 20 ரூபாய் டோக்கன் ‘ஒர்க் அவுட்’ ஆகிவிட்டது: தினகரன் அணி மாவட்டச் செயலாளரின் பேச்சால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம், அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது என தினகரன் அணியின் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் உள்ள தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசியதாக தினகரன் ஆதரவாளர்கள் வட்டாரம் தெரிவித்ததாவது:

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என எதிர்தரப்பினர் துண்டறிக்கை அச்சடித்து வெளியிட்டனர். இதைப்பார்த்த நானும், மற்றவர்களும் தினகரனிடம் சென்று, ‘அவர்கள் தினமும் பொய்யாக பரப்புரை செய்து வருகின்றனர். நாம் தவறு செய்யவில்லை என உலகுக்கு எப்போதுதான் தெரியப்படுத்தப் போகிறீர்கள்?’ எனக் கேட்டோம். அதற்கு பிறகுதான், டிடிவி தினகரன் அந்த சிடியை வெற்றிவேலிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டவுடன் வெற்றிவேல் சற்று தயக்கம் காட்டினார்.

அப்போது, “நீ போய்க் கொடு வெற்றிவேல். வழக்குத்தானே போடுவார்கள். பார்த்துக் கொள்ளலாம்” என நான்தான் தைரியம் கூறி தட்டிக் கொடுத்தேன். அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சிகள் வெளியானது. அதைப் பார்த்ததும் தேர்தலில் டிரெண்ட் மாறிவிட்டது.

ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம்

அதேபோல, 2 லட்சம் ஓட்டுக்கு தலா ரூ.6,000 வீதம் பணத்தை அவர்கள் வீட்டுக்கு வீடு கொடுத்துவிட்டனர். அதைப்பார்த்த நம் ஆட்கள், அவர்கள் பணம் கொடுத்து முடித்து விட்டனர். நாம் இன்னும் பணம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. எப்போது கொடுக்கப் போகிறோம் எனக் என்னிடம் கேட்டனர். அதன்பிறகு அனைத்து முக்கிய தலைவர்களும் உட்கார்ந்து ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம். அதைத்தொடர்ந்து, 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம். அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது” என்று ராஜசேகரன் பேசினார்.

வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை டிடிவி தினகரனும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், அந்த அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவரே பகிரங்கமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்களுக்காக..

இதற்கிடையே ராஜசேகரன் நேற்று மதியம் அவசரம், அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, “எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினேன். அப்போது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சிலவற்றை பேசினேன். அதை உண்மைக்குப் புறம்பாக சிலர் வெளியிட்டுவிட்டனர். நான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே பேசினேன். இந்த விவகாரம் தொடர்பாக தினகரனுக்கு விளக்கம் அளித்துள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

சினிமா

11 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

28 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

30 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்