ஹெலிகாப்டர், விமானம், கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்: 1200-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மாயம்? - ‘ஒக்கி’ புயலில் சிக்கிய 837 பேர் கர்நாடகா, மகாராஷ்டிராவில் பாதுகாப்பாக கரை ஒதுங்கியதாக தகவல்

By செய்திப்பிரிவு

கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1,200-க்கும் அதிகமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களில், 837 மீனவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மீனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர், 11 கப்பல்கள், 3 கடற்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் குளச்சல், தேங்காய்பட்டிணம், சின்னமுட்டம், முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் 1200-க்கும் மேற்பட்டோர் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில் ஒக்கி புயலில் அவர்கள் சிக்கினர். இவர்களில் பலர் இதுவரை கரை திரும்பாததால் அவர்களது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், கடலோர கிராமங்களில் பதற்றம் உருவாகியுள்ளது.

இதுபோக, 75-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குமரி மாவட்ட மீனவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வேப்பூர், முனம்பம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில் ஒக்கி புயல் குறித்த தகவல் வெளியானதால், அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், தேவகாடு மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக தஞ்சமடைந்தது தெரியவந்துள்ளது. அவர்களையும், அவர்கள் பிடித்து வைத்த மீன்கள் மற்றும் விசைப்படகுகளையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கச் செயலாளர் அந்தோணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் சுமார் 1200 பேர் வரை மாயமாகி இருக்கலாம் என மீனவப் பிரதிநிதிகளும் உள்ளூர் மக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் ‘தி இந்து’விடம் கூறும்போது, ``ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் திரும்பி வர 15 நாட்களுக்கு மேலாகும். அதனால், அவர்கள் இந்த பட்டியலில் வரமாட்டார்கள். கேரளாவில் மாயமான குமரி மாவட்ட மீனவர்கள் 101 பேரில், 60 பேரை நேற்று கேரள மீன் வளத்துறையினர் மீட்டனர். அவர்கள் திருச்சூரில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதியுள்ள 41 மீனவர்களையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்காக டார்நிக்-760 என்ற ஹெலிகாப்டர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணி துரிதகதியில் நடந்து வருகிறது” என்றனர்.

837 மீனவர்கள் தஞ்சம்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிற்பகலில் கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் ஆய்வு செய்தார். முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

‘ஒக்கி’ புயல் வரும் என்பது தெரியாமல் மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றத்தின் காரணமாக ஏராளமான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொடர்பு கொண்டு, மீனவர்களை தேடும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.

தற்போது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 837 மீனவர்கள், 71 மீன்பிடி படகுகளில் குஜராத், கர்நாடகம், லட்சத்தீவு உள்ளிட்ட கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்கி உள்ளனர். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.

11 கப்பல்கள்

காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில், கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் யமுனா, ஐஎன்எஸ் சாகர் காரி, ஐஎன்எஸ் நெரிக் பிசிக் ஆகிய பெரிய கப்பல்கள், ராஜாளி என்ற போர் கப்பல் உள்ளிட்ட 11 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. அதேபோல் கடற்படைக்குச் சொந்தமான விமானம், ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே, மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

புயலால் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இத்தகவல் முழுமையாக கிடைத்த பின் நிவாரண உதவி குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

130 மீனவர்கள் வருகை

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து 17 நாட்டுப்படகுகளில் 105 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 30-ம் தேதி ஏற்பட்ட புயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை கரை திரும்பினர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் நிம்மதி அடைந் தனர்.

இதேபோல், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள், 3 நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். புயலில் சிக்கிய அவர்கள் பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். அங்கிருந்து தங்களது கிராமங்களுக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இனயம், குளச்சல் உள்ளிட்ட கடலோர பகுதிகளை தமாகா தலைவர் வாசன் நேற்று பார்வையிட்டார்.

நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: நிவாரணப் பணிகளையும், முதலுதவியும் அரசு முறையாக செய்யவில்லை. புயலால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும். பாதிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு அரசு செயல்படவில்லை. இவ்வாறு கூறினார்.

நிர்மலா சீதாராமன்

இதனிடையே மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒக்கி’ புயலால் காணாமல் போன தமிழக மீனவர்கள் 71 பேர், கேரள மீனவர்கள் 183 பேர் உள்ளிட்ட 261 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்