பழனிசாமி, ஓபிஎஸ் பலவீனமான தலைவர்கள்..: பத்திரிகையாளர் குருமூர்த்தி விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பலவீனமான தலைவர்கள் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து தனியாக செயல்பட்டது. அவர்களுக்கு பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி ஆதரவாக இருந்ததாக கூறப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தியது, சசிகலாவை பதவியேற்க அழைக்க ஆளுநர் தாமதம் செய்தது, இரட்டை இலை முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, மெகா வருமானவரித் துறை சோதனை என அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்தச் சூழலில், முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனால், டிடிவி தினகரன் தலைமையில் புதிதாக ஒரு அணி செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் குருமூர்த்திதான் அனைத்தும் காரணம் என தினகரனும் அவரது ஆதரவாளர்களும் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக அணிகள் இணைப்புக்கும், துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றதற்கும் குருமூர்த்தியே காரணம். அவரது ஆலோசனைப்படியே பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் செயல்பட்டு வருவதாக தினகரன் தரப்பினர் மட்டுமல்லாது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த குருமூர்த்தி, ‘ஆர்.கே.நகரில் வாக்குகளை விலைக்கு வாங்கி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் வாக்குகளும் தினகரனுக்கு சென்றுவிட்டது’ என பதிவிட்டிருந்தார்.

ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 4 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள குருமூர்த்தி, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. பலவீனமான தலைவர்களால் (Impotent leaders) தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் இப்போதுதான் தலைவர்களாக செயல்படத் தொடங்கியுள்ளனர். தங்கள் தலைவரின் பாதத்தை எப்படி தொட்டு வணங்குவது என்பதையும், அவர்களுக்காக எப்படி லஞ்சம் வசூலிப்பது என்பதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்’ என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. அவர் பயன்படுத்திய தடித்த, கீழ்த்தரமான வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த அதிமுகவினர் கட்சியை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக அணிகள் இணைந்தபோது குருமூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுவது தவறு. அவர் என்ன கிங் மேக்கரா, வானத்தில் இருந்து குதித்தவரா, எதற்கும் ஓர் எல்லையுண்டு. அதிமுக பொங்கினால் என்ன நடக்கும் என்பதை அறிந்து பேச வேண்டும். ஆட்சி சிறப்பாக நடக்கும்போது சூது மனப்பான்மையுடன், விஷமத்தனமான வார்த்தையை குருமூர்த்தி வெளியிடுகிறார். படித்த முட்டாள்கள்தான் இதுபோல பேசுவார்கள். குருமூர்த்தியின் அவதூறு குறித்து அவசியம் ஏற்பட்டால் வழக்கு தொடர்வோம்’’ என்றார்.

இதற்கு உடனடியாக ட்விட்டரில் பதிலளித்துள்ள குருமூர்த்தி, ‘‘எனது ஆலோசனைப்படி பழனிசாமி - ஓபிஎஸ் அரசு செயல்படவில்லை என ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி. நான் எப்போதும் இந்த அரசுக்கு ஆலோசனை கூறியதில்லை. ஒரு சுதந்திரமான எழுத்தாளராக யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல் கட்சிகள், தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பேன். பழனிசாமி அரசு பற்றி ‘துக்ளக்’ இதழின் கேள்வி - பதில் பகுதியில் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். அரசு பற்றியும், பலவீனமான அதிமுக தலைமை பற்றியும் நான் விமர்சிப்பது புதிதல்ல’’ என கூறியுள்ளார்.

பழனிசாமி - ஓபிஎஸ் அரசுக்கு குருமூர்த்தி பக்கபலமாக இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவரது கடுமையான விமர்சனமும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமாரின் பதிலும் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறான புரிதல் என விளக்கம்

‘Potential’ என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் 'திறன் உள்ள' எனப் பொருள். இதற்கு எதிர்ப்பதமான ஆங்கில வார்த்தைதான் ‘impotent’. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் அரசியல் ரீதியாக திறனற்ற தலைவர்கள் என்பதை சொல்வதற்காகவே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால், இதை தவறாக புரிந்துகொண்டு அமைச்சர் என்னை விமர்சித்துள்ளார்.

சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்தில் இருந்து எதிர்ப்புகளை சந்தித்தவன் நான். காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

16 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்