இமானுவேல் சேகரன் மணிமண்டப அறிவிப்பு | “எங்களை அந்நியப்படுத்தி திமுகவினர் நுழைய முயற்சி” - கிருஷ்ணசாமி

By என். சன்னாசி

மதுரை: "தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிவிப்பால் எங்களை அந்நியப்படுத்தி விட்டு, திமுகவினர் நுழைய பார்க்கின்றனர். அவருக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம்” என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. மதுப் பிரியர்களால் பொது இடங்கள், பள்ளி, கல்லூரி பகுதியிலும் வன்முறை நடக்கிறது. மதுரையில் கூட, மது குடித்த இளைஞர்களால் மாணவிகள் விடுதிக்கு செல்ல முடியாமல் சுவர் ஏறிச் சென்றுள்ளனர். சென்னையில் மது போதையில் காவலர்களுக்குள் தகராறு நடந்தது. டாஸ்மாக்கால் சமூக சீரழிவுகள் அதிகரிக்கின்றன. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பூரண மதுவிலக்கு குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து டிச.15-ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும். இடம் பிறகு அறிவிக்கப்படும். அக்.2 முதல் தொகுதிவாரியாக மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்து மதம் பற்றி அமைச்சர் உதயநிதி தவறான கருத்தை வெளியிடுகிறார். கொசுவைப் போன்று சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என பேசுபவர்கள் அது பற்றி விளக்கிவிட்டு அதிலுள்ள குறை, நிறைகளை சுட்டிக்காட்டி இருக்கவேண்டும். வெறுப்பு பேச்சுக்கு நீதிமன்றமே முன்வந்து வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றம் முன்வந்து உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சமநிலை மாற்றம் தேவை. ஆனால், அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடாது. அமைச்சரின் சனாதன பேச்சுக்கு தமிழகத்திலுள்ள 18 மடாதிபதிகளும் ஏன் பதிலளிக்கவில்லை. சனாதனம் குறித்த அமைச்சரின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிவிப்பால் எங்களை அந்நியப்படுத்தி விட்டு, அவர்கள் நுழைய பார்க்கின்றனர். நாங்கள் கேட்டது, அவருக்கு அரசு விழா அறிவிக்க வேண்டும் என்று. எங்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினோம். திங்கள்கிழமை தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மதுரையில் இருந்து 1.30 மணிக்கு கிளப்பி 8.30 மணிக்கே அனுமதித்தனர். எங்களது வாகனங்களை போலீஸார் தேவையின்றி சோதனை நடத்தினர். எங்களுக்கு இடை யூறு செய்யும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டனர். மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கவிட்டு, அவரது விழாவை ரத்து செய்ய முயற்சி நடக்கிறதோ எனசந்தேகிக்கிறோம். எங்களுக்கு களங்கம் கற்பிக்க முயன்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்.

கடந்த 20 ஆண்டாக போலீஸார் இல்லாமல் நாங்கள்தான் முக்கியத்துவம் கொடுத்து விழா நடத்தினோம். 5 ஆண்டாகவே அரசியல் கட்சியினர், அமைப்புகள் வருகின்றன. இது மத நல்லிணக்கத்துக்கான அடையாளம் தான். மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் இவ்விழா குறித்து வெளியிட்ட அறிக்கையில் தியாகி இமானுவேல் சேகரன் என குறிப்பிடுவதில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இனிமேலும் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்” என்று அவர் கூறினார்.இந்த சந்திப்பின்போது, தமோதரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடிமதிப்பில் இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழக அரசின் சார்பில் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

கல்வி

9 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுலா

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்