சீங்கப்பதி மலை கிராம மக்களின் திறமைக்கு சான்று: கலைப் பொருட்களாகும் களைச் செடிகள் - வனச் சூழலை காக்கும் முயற்சிக்கு பூம்புகார் விற்பனை நிலையம் அங்கீகாரம்

By ர.கிருபாகரன்

லாண்டனா!. வனத்தை ஆக்கிரமித்து அழிக்கக்கூடிய உண்ணிச்செடி. அதை எப்படி அழிப்பது, காடுகளை அதன் பிடியில் இருந்து எப்படி மீட்பது என்பதே சூழல் ஆர்வலர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு விடையளிக்கும் விதமாக கோவையில் தயாராகிறது லாண்டனா பர்னிச்சர் பொருட்கள். அழிக்கப்பட வேண்டிய ஒரு தாவரத்தை அழகான பர்னிச்சர் பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பழங்குடி மக்கள்.

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் பார்வைக்கு மூங்கிலைப் போல காட்சியளிக்கின்றன அந்த பர்னிச்சர் பொருட்கள். விலை மட்டும் சற்று குறைகிறது. தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. விசாரித்தபோதுதான் தெரிந்தது அவை மூங்கிலில் உருவானவை அல்ல, லாண்டனா செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்று.

07cbkk01_lantana (2) சீங்கப்பதியில் லாண்டனா பர்னிச்சர்களை தயாரிக்கும் பழங்குடி மக்கள்.

புதர் போல படர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும். நீராதாரத்தை வற்றச் செய்துவிடும் என்ற குற்றச்சாட்டு இந்த லாண்டனா எனப்படும் உண்ணிச்செடி மீது உண்டு. தமிழக வனங்களை ஆக்கிரமித்துள்ள இச்செடியை அழிப்பது வனத்துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கோவை சீங்கப்பதி மலைக்கிராம மக்கள் இந்த செடிக்கு வேறொரு அடையாளம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தாங்கள் உள்ள வனப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் லாண்டனா செடிகளை வெட்டி வந்து பர்னிச்சர் பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சீங்கப்பதி மக்கள்.

வனத்தின் சூழல் காப்பாற்றப்படுகிறது. மற்றொருபுறம் கலைப்பொருளாக பொருளாதார தேவையை ஈடு செய்து வருகிறது.

எதற்கும் பயன்படாது என ஒதுக்கப்பட்ட லாண்டனா செடி அனைவராலும் விரும்பக்கூடியதாக அடையாளம் பெற்றிருக்கிறது. பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த பர்னிச்சர் பொருட்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்.

கோவை பூம்புகார் மேலாளர் ரா.நரேந்திரபோஸ் கூறும்போது, ‘பூம்புகார் விற்பனை நிலையத்தில் முதல் முறையாக லாண்டனா செடியில் இருந்து தயாரான சோபா, மேசை, டீபாய், இருக்கை, புத்தக அலமாரி, சிறிய அளவிலான குப்பைத் தொட்டி, பொம்மை பொருட்கள் என சுமார் 10 விதமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

பார்ப்பதற்கு மட்டுமல்ல, உறுதியிலும் மூங்கில் போலவே இருக்கிறது. தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் கைவினைஞர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், கோவை பயிற்சி ஆட்சியராக உள்ள சரண்யாஹரி கொடுத்த தகவலின்பேரில் சீங்கப்பதிக்கு சென்று, லாண்டனா பொருட்களை பார்த்தோம். லாண்டனா தண்டுகளை, வேக வைத்து பதப்படுத்தி, வளைத்து உருவாக்கப்படும் இந்த பொருட்கள் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்பதால் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இதை உருவாக்கும் பழங்குடி மக்களுக்கும் பொருளாதார உதவியாக இருக்கும்’ என்றார்.

மிக வேகமாக பரவக்கூடியது லாண்டனா செடி. வெட்டி வீசுவதைத் தவிர இதை கட்டுப்படுத்த வேறெந்த வழிமுறையும் நம்மிடம் இல்லை. அப்படியான சூழலில் பழங்குடிகளின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.

களைச்செடியின் பிடியில் இருந்து காடும் காப்பாற்றப்படும். அந்த களைச் செடி, கலைப் பொருளாகவும் கொண்டாடப் படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்