ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: பாஜக பின்தங்கி இருக்கிறது என்று கூறாதீர்கள், தமிழகமே பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ஆர்.கே.நகரில் முதல் நாளில் இருந்தே பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினகரனுக்கு அதிக வாக்கு கிடைக்க காரணம் என்ன? அவர் என்ன தியாகம் செய்திருக்கிறார்?, தமிழக மக்களுக்காக உழைத்து இருக்கிறாரா?. உண்மையான தேர்தலே நடக்காதபோது, வாக்கு குறியீட்டை எப்படி அளவிட முடியும். பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்து பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கிவிட்டது. எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திமுக இந்த நிலைமையை எளிதில் எதிர்கொள்ளும்.

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:இடைத்தேர்தல் முடிவு எந்த வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. இந்த முடிவுகள் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால், தேர்தல் நடத்தப்பட்ட விதமும், வாக்குகள் ஏல முறையில் விலைக்கு வாங்கப்பட்ட விதமும்தான் தமிழகத்தில் இனி ஜனநாயகம் எப்படியெல்லாம் படுகொலை செய்யப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

தினகரனின் வெற்றி, தமிழக மக்களின் தோல்வி. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இனியும் நீடித்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது.

விசிக தலைவர் திருமாவளவன்: ஜெயலலிதாவை அடுத்து தினகரன் தரப்பா, முதல்வர் கே.பழனிசாமி தரப்பா என்பதை மனதில் வைத்தே அந்தத் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தப் போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தால் பண விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை. இந்தத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைவிட, தோல்வி தேர்தல் ஆணையத்துக்கு என்பதே உண்மையாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளும் கட்சியும் வெல்ல முடியவில்லை, எதிர்க்கட்சியும் வெல்ல முடியவில்லை. சுயேச்சை வேட்பாளர் வென்றிருக்கிறார். இந்தத் தேர்தல் இயற்கையாக நடைபெற்றதா, செயற்கையாக நடைபெற்றதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் கண்டிப்போடு செயல்பட்டு கோட்பாடுகளைக் கடைபிடிக்க முடியாமல், மீறுகின்ற கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் மீது மட்டுமல்ல. பொதுத் தேர்தல் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். இது ஏற்புடையதல்ல.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்: அதிமுகவை ஆதரிக்கவில்லை என்பதற்காக பாஜக தேர்தலில் போட்டியிட்டது. பாஜகவுக்கு பின்னடைவு என்று கருதினால், திமுகவுக்கும் பின்னடைவு என்றுதான் கருத வேண்டும். தேர்தலில் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு முன் நிச்சயம் சூழ்நிலை மாறும்.

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்: நான் வெற்றிபெற்றால் துரோகிகள் ஆட்சி வீட்டுக்கு செல்லும் என்று கூறித்தான் தினகரன் வாக்கு சேகரித்தார். மக்கள் அவரை நம்பி வாக்களித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம், கட்சி எங்களிடம்தான் வந்து சேரும். மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது.

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி: ஆட்சியாளர்கள் சரியில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதை அவர்கள் உணர வேண்டும். கட்சி, சின்னம் எதுவும் இல்லாமல் சரித்திரம் வாய்ந்த வெற்றியை தினகரன் பெற்றுள்ளார்.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தேர்தல் முடிவு குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 secs ago

தமிழகம்

10 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

38 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

40 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்