சிறுமி சரிகா மரணம்: எங்கே நடந்தது தவறு?

By மு.அப்துல் முத்தலீஃப்

சிறுமி சரிகா மரணத்திற்கு ஆம்புலன்ஸ் தாமதம் மட்டுமே காரணம்  கூறமுடியுமா? ஆம்புலன்ஸ் வரும் வரை மருத்துவர்கள் சிறுமியை காப்பாற்ற என்ன செய்தார்கள்? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சரிகாவை சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் தாமதமானதால் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து விசாரணை நடத்த மருத்துவப் பணிகள் குழுத்தலைவர் இன்பசேகரன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் வசிக்கும் ஆனந்தன் என்பவரது மகள் சரிகா. இவர், சிறுநீரக பாதிப்பினால் டயாலசிஸ் செய்யப்படும் நிலையில் சிகிச்சைப்பெற்று வந்தார். நேற்று அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சரிகா உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் தாமதம் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று முதலில் கூறப்பட்டாலும் தாமதமான அந்த ஏழு மணி நேரம் சிறுமியைக் காப்பாற்ற மருத்துவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள் என்கிற கேள்வியையும் விசாரணை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

சிறுமி உயிரிழப்புக்கு பொதுவான வார்த்தையாக அலட்சியம் என்று கூறினாலும் இது குறித்து மருத்துவ நலப்பணி இயக்குனர் இன்பசேகரன் தலைமையில் பல கோணங்களில் விசாரணை இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

உயிருக்குப் போராடிய சிறுமியை ஏன் உடனடியாக அருகிலுள்ள செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை?

காஞ்சிபுரம் மருத்துவமனையிலையே சிறுமிக்கு டயாலசிஸ் செய்யாமல் சாதாரணமாக ஆக்சிஜன் மட்டும் கொடுத்த காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஐ.எம்.சி.யூ வசதி இருந்தும் உயிருக்கு போராடிய மாணவியை ஏன் அதில் அனுமதிக்கவில்லை?

ஆம்புலன்ஸ்ஸுக்கு சொல்லிவிட்டோம் அது வர தாமதாமாகிறது என்று மாணவிக்கு ஏழுமணி நேரம் செயற்கை சுவாசம் மட்டுமே கொடுத்து சாதாரண படுக்கையில் வைத்திருந்தது ஏன்?

போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மருத்துவர்களை நோக்கி திரும்பியுள்ளது.

ஆம்புலன்ஸ் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசர சிகிச்சைக்காக கொண்டுச் செல்லும் வாகனமே தவிர அதில் உள்ள வசதிகள் சிறுமி உயிரைக் காப்பாற்றாது. ஆம்புலன்ஸ்ஸை மட்டுமே காரணம் காட்டி ஏழு மணி நேரம் ஆம்புலன்ஸ் தாமதமான நேரத்தில் சிறுமியை காப்பாற்ற என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. தாங்கள் கடமை செய்யாமல் போனதிலிருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் தாமதம் என்ற பிரச்சனை பெரிதாக்கப்படுகிறதா? என்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

மறுபுறம் 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-க்கும் குறையாமல் உள்ள நிலையில், மாவட்ட மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் உள்ள நிலையில், பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ்களும் உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதற்கு என்ன காரணம்? எத்தனை போன் கால்கள் ஆம்புலன்ஸ் கேட்டு செய்யப்பட்டன? போன்ற கேள்விகளும், மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரிலேயே ஆம்புலன்ஸ் வந்தது என்ற தகவலும் கேள்விக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் கோளாறு என்ற காரணம் சரியான காரணமா? போன்ற கேள்விகளும், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் உள்ளன என்ற தகவல்களும் கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயங்கள். மூன்று அதிகாரிகள் குழு இன்று காலை முதல் இது குறித்து தொடர் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வருகின்றனர்.

தனது சிறுநீரகத்தை தனது மகள் சரிகாவுக்காக தானமாக வழங்க முன்வந்தும் தகுதியிருந்தும் மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்யாமல் தள்ளிப்போடப்பட்டதாக சரிகாவின் தாயார் கூறியுள்ளார், அது குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சரிகாவின் பெற்றோரது கோரிக்கையாக உள்ளது.

விசாரணையின் முடிவில் நடவடிக்கை வரும் என்ற சுகாதாரத்துறைச் செயலர் பதிலளித்துள்ளார். நடவடிக்கை உரியவர் மீது வரும் என்பதை நம்புவோமாக

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

உலகம்

36 mins ago

வணிகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்