மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை மறுஆய்வு செய்க: வைகோ

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை மறுஆய்வு செய்து, அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுவதும் 103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மத்திய பாஜக அரசுக்கு வழிகாட்டும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அளித்துள்ள பரிந்துரையில் 103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் 43 ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை அராய்ச்சி நிலையம், சென்னையில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகிய மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிட மத்திய வேளாண்துறை அமைச்சகம் முடிவெடுத்து இருக்கிறது.

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கரும்பு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் மூன்றாயிரம் கரும்பு ரகங்கள் இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கோ 205 மற்றும் கோ 0419 போன்ற கரும்பு வகைகள் உலக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் டி.இராமசாமி தலைமையிலான குழு ஒரே பயிருக்காக இருவேறு இடங்களில் செயல்படும் ஆராய்ச்சி மையங்களை இணைப்பதால் செலவுகள் குறையும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை லக்னோவில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க முடிவு எடுத்திருக்கிறது, இதைப்போலவே சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தைக் கொச்சி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில்1993-ல் திருச்சி தயனூரில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. வாழை உற்பத்தியை அதிகரிக்க, தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் பற்றிய ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய ரக வாழைகள் உருவாக்குதல், நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பணிகள் மூலம் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு பயனுடையதாக இயங்கி வருகின்றது.

நிதி ஆயோக் பரிந்துரையின்படி திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்துக்கு மூடுவிழா நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று கூறிவரும் மத்திய பாஜக அரசு, நடைமுறையில் வேளாண்மைத் துறையின் நமது தற்சார்பை ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேளாண் சந்தையைத் திறந்துவிட திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில் விவசாய ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள மத்திய வேளாண்துறை அமைச்சகக் கூட்டத்தில், தமிழகத்தில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை மறுஆய்வு செய்து, அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

4 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்